நாடாளுமன்ற ரகளை இந்தியாவிலும்தான் நடக்கிறது! - இலங்கை அதிபர் மைத்திரி | Clashes in Parliment common for many countries like India- Maithripala sirisena

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (03/12/2018)

நாடாளுமன்ற ரகளை இந்தியாவிலும்தான் நடக்கிறது! - இலங்கை அதிபர் மைத்திரி

இலங்கை அதிபர்

இந்தியா உட்பட பல நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் மோதல்கள் நடக்கின்றன என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

கொழும்புலிருந்து வெளியாகும் `சிலோன் டுடே’ இதழுக்கு அளித்த பேட்டியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பநிலை நீடித்துவரும்நிலையில், அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை மையமாகக் கொண்டே அரசியல் நடப்புகள் அரங்கேறிவருகின்றன. சமகால நிலவரம் குறித்து `சிலோன் டுடே’ இதழில் நேற்று மைத்திரியின் விரிவான பேட்டி வெளியாகியுள்ளது. 

அதில், அரசுத் தரப்பு எம்.பி-க்கள் அவரைப் பற்றி அதிருப்திகூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும் எனக் கூறியுள்ள மைத்திரி, ``இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்யா முதலில் மகிந்த ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரச் செய்தபோது, உரிய முறையைப் பின்பற்றவில்லை. பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பை மூன்று வகைகளில் மேற்கொள்ளலாம். பெயரைக் குறிப்பிட்டோ மின்னணு முறையிலோ இதைச் செய்யமுடியும். இப்போது முறையாக அவர்தரப்பில் செயல்படுவதால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு, அவர் நிலை ஆணைகளைக் கடைப்பிடித்துள்ளார்” என்று ஜயசூர்யவுக்கு நற்சான்று வழங்கியுள்ளார்.

ரணில்

இதேசமயம், ``நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் கட்சி தரப்பு வெற்றிபெறுமானால் அப்போது மகிந்த ராஜபக்சே உரிய முடிவெடுப்பார் எனக் கூறியதைப் பற்றிக் கேட்கிறீர்கள்; இப்போதைய அரசாங்கமானது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, அரசியலமைப்பின்படியும் இதுதான் சரியானது” என்று மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கையைப் பெற்றாலும்கூட ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்கமுடியாது. பெரும்பான்மை ஆதரவைப் பெறும் கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும் அதிபருடன் இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் மைத்திரி அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சே

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு, ``நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவான சங்கதிதான். இலங்கையில் மட்டும் இது நடப்பதில்லை. இந்தியாவில் ஜப்பானில் அமெரிக்காவில் ரஷ்யாவில் ஒருவரையொருவர் துரத்துவதெல்லாம் நடக்கிறது. சில நேரங்களில் கைகால்களை உடைத்துக்கொள்ளவும் செய்கின்றனர்” என்று மைத்திரி கூறினார். 


[X] Close

[X] Close