வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (03/12/2018)

உலக அழகிப் போட்டியில் டாப் 30 இடத்துக்குள் வந்த தமிழகப் பெண் அனுக்கீர்த்தி வாஸ்!

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள். திருநங்கைகளுக்காகச்  செயல் படுவதுதான் என் எதிர்காலத் திட்டம். 

உலக அழகிப் போட்டியில் டாப் 30 இடத்துக்குள் வந்த தமிழகப் பெண் அனுக்கீர்த்தி வாஸ்!

2018-ம் ஆண்டுக்கான உலக அழகியைத் தேர்வு செய்யும் `மிஸ் வேர்ல்டு - 2018’ போட்டி வருகிற 8-ம் தேதி சீனாவில் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுக்கீர்த்தி வாஸ் உட்பட 120 நாட்டைச் சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். முடிவெடுக்கும் திறன், அழகு, சிந்தனை என பலகட்ட தேர்வுகள் நவம்பர் மாதத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்தகட்ட சுற்றுக்குச் செல்வார்கள்.

                                                                                               அனுக்கீர்த்தி வாஸ்

கடந்த வாரம் ஓட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற 'பாப்புலாரிட்டி' சுற்றில் இந்தியர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அனுக்கீர்த்தி தேர்வாகி அடுத்த சுற்றான 'ஹெட் டு ஹெட்' சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார். இந்தச் சுற்றைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாகப் 30 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள்தான் உலக அழகிக்கான இறுதிச்சுற்றில் கேட்வாக் செய்வார்கள்.

அனுக்கீர்த்தி வாஸ்

'ஹெட் டு ஹெட்' சுற்றில் மியான்மார்  நாட்டைச் சேர்ந்த அழகியுடன் கைகோத்த அனுக்கீர்த்தி. இந்தப் போட்டிக்கு நடுவர்களாக `2013-ம் ஆண்டு உலக அழகி மேகன் யங்', '2016-ம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃப்னி டெல் வாஜே', 2017-ம் ஆண்டு உலக அழகி மனுஷி சில்லர்' ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். உங்களின் எதிர்கால புராஜக்ட் திட்டம் என்ன... இதுதான் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி.

  "எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்காகச் செயல்படுவதுதான் என் எதிர்காலத் திட்டம். அப்பா இல்லாத எனக்கு என் அம்மா பக்கபலமாக இருந்தார். அதே போல் நான் ஆதரவற்ற மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க நினைக்கிறேன்" என்றார் அழகான சிரிப்போடு. இதை வரவேற்ற நடுவர்கள் இறுதிச்சுற்றுக்கு அனுக்கீர்த்தியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். 8-ம் தேதி நடக்கும் உலக அழகி போட்டியில் நம் எல்லோருக்கும் அனுக்கீர்த்தி தென்படுவார். வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனுக்கீர்த்தி வாஸ்

அனுவின் இந்த வெற்றி குறித்து அவரின் அம்மா செலினாவிடம் பேசினேன். ``அனு, மனதால் உறுதியான பொண்ணு. நிச்சயம் அவ ஜெயிப்பா. சின்ன வயசுலேருந்தே மத்தவங்களுக்கு உதவ நினைக்கிற குணமுள்ள பொண்ணு. அதனால அவ பதில் எனக்கு ஆச்சர்யத்தைத் தரலை. அவளோட எதிர்காலத்தை அவதான் செதுக்குறான்னு அடிக்கடி சொல்வா. நிச்சயம் அதை உலக அழகி போட்டியில நிரூபிப்பாள்'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார் செலினா.