வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:02 (04/12/2018)

14 ஆண்டுகளாகக் கசியும் எண்ணெய்... அமெரிக்காவில் சூழலியல் பயங்கரம்! #TaylorOilSpill

நாம் பார்க்கவிருப்பது எண்ணூர் எண்ணெய்க் கசிவைப் பற்றி அல்ல. அதைவிடப் பல மடங்கு பேராபத்தான ஓர் எண்ணெய்க் கசிவின் வரலாற்றைப் பற்றி. வெறும் இரண்டு, மூன்று நாள்கள் கொட்டிய எண்ணெய்யைச் சுத்தப்படுத்தவே ஓராண்டுக்கும் மேல் காலம் பிடித்துள்ளது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் எண்ணெய் கசிந்தால் அந்தக் கடல் பரப்பும் அதில் வாழும் உயிரினங்களும் அந்தக் கடலையே நம்பி வாழும் மக்களின் நிலை? அப்படியான சம்பவம்தான் டெய்லர் எண்ணெய்க் கசிவு.

14 ஆண்டுகளாகக் கசியும் எண்ணெய்... அமெரிக்காவில் சூழலியல் பயங்கரம்! #TaylorOilSpill

வ்வொரு வாரமும் ஒவ்வொரு பேசுபொருள், வாயில் மென்னுவதற்கு பொறி போல எந்த பிரச்னையையாவது பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும்தான் சமீப ஆண்டுகளின் வாழ்க்கை நகர்கிறது. இதில் கடந்த மாதம் என்ன நிகழ்ந்தது, கடந்த வருடம் ஏற்பட்ட அந்தப் பிரச்னை என்னவானது என யோசித்துப் பார்க்கவெல்லாம் நேரமில்லை. நிலத்தில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகளில் நாம் மறந்துபோனது ஒன்று எண்ணூர் எண்ணெய்க் கசிவு. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்த பேரிடர். ஜனவரி 28, 2017 அன்று ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு கழிவுகள் தொடர்ந்து, பதினைந்து நாள்களுக்கு மேல் அகற்றப்பட்டது. அப்போதும் முழுதாக அகற்றப்படவில்லை. கடந்த வாரம்கூட இன்னும் எண்ணெய்க் கழிவுகளைச் சுத்திகரிக்கும் பணி கப்பல்கள் மூலம் நடந்துள்ளது.

ஆனால் நாம் பார்க்கவிருப்பது எண்ணூர் எண்ணெய்க் கசிவைப் பற்றி அல்ல. அதைவிடப் பல மடங்கு பேராபத்தான ஓர் எண்ணெய்க் கசிவின் வரலாற்றைப் பற்றி. வெறும் இரண்டு, மூன்று நாள்கள் கொட்டிய எண்ணெய்யைச் சுத்தப்படுத்தவே ஓராண்டுக்கும் மேல் காலம் பிடித்துள்ளது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் எண்ணெய் கசிந்தால் அந்தக் கடல் பரப்பும் அதில் வாழும் உயிரினங்களும் அந்தக் கடலையே நம்பி வாழும் மக்களின் நிலை? அப்படியான சம்பவம்தான் டெய்லர் எண்ணெய்க் கசிவு (Taylor Oil Spill). எண்ணெய்க் கசிவுக்கென்று பெயர்போன மெக்சிகோ வளைகுடாவில்தான் (Gulf Of Mexico) இந்த எண்ணெய்க் கசிவும் நிகழ்ந்துள்ளது, நிகழ்கிறது. 2004-ம் ஆண்டு தொடங்கிய இந்த எண்ணெய்க் கசிவின் மீதான வெளிச்சம், 2010-ம் ஆண்டு நடந்த மற்றொரு மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்தின் போதுதான் விழுந்தது. 2010-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி டீப் வாட்டர் ஹாரிசான் (Deepwater Horizon oil spill) எண்ணெய் தளத்தில் வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் 11 பேர் உயிரிழக்கின்றனர், 17 பேர் காயங்களுடன் தப்பிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குக் கடலில் எண்ணெய் கசிந்து கொட்டுகிறது. உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு சம்பவங்களில் டீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய் விபத்துக்கு (Deepwater Horizon oil spill) இரண்டாமிடம். 6,500 சதுர கிலோ மீட்டரிலிருந்து 1,76,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 200 மில்லியன் கேலன்கள் (Gallons) கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி சுமார் இரண்டரை வருடங்கள்  தொடர்ந்து நடைபெற்றது. 

Oil spill

டீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய்க் கசிவு ஆரம்பித்த போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,  லூசியானா சுற்றுச்சூழல் நடவடிக்கை அமைப்பு (Louisiana Environmental Action Network), ஸ்கை ட்ரூத் (Sky Truth) போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் மெக்சிகோ வளைகுடா பகுதியை ஆய்வு செய்தனர். செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட மேப்களிலும், கடற்பகுதிக்கு மேல் பறந்து பார்த்த போதும் டீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய்க் கசிவுக்குத் தொடர்பில்லாத புதிய எண்ணெய்க் கசிவு அவர்களுக்குத் தென்பட்டது. அந்த எண்ணெய்க் கசிவு டெய்லர் எனெர்ஜி (Taylor Energy) நிறுவனத்துக்குச் சொந்தமான `மிஸிஸிப்பி கன்யன் 20' எண்ணெய்த் தளத்திலிருந்துதான் (Mississippi Canyon 20 (MC20) oil platform) வந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த மிஸிஸிப்பி தளத்திலிருந்து எண்ணெய் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக நிதானமாகக் கசிந்துகொண்டிருக்கிறது. செப்டம்பர் 16, 2004 அன்று சூறாவளி ஐவன் (Hurricane Ivan) மெக்சிகோ வளைகுடாவைச் சூறையாடியது. லூசியானா (Louisiana) கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருக்கும் மிஸ்ஸிப்பி எண்ணெய்த் தளத்தை சூறாவளி பயங்கரமாகத் தாக்கியதில், தனது ஒரிஜினல் இடத்தை விட்டு 560 அடி நகர்ந்துவிட்டது. இதன் விளைவாக 28 எண்ணெய்க் கிணறுகளில் 25-க்கும் மேற்பட்டவை பழுதடைந்து கசிய ஆரம்பித்தன. மேலும் கடலுக்குள் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அவை மண்ணுக்குள் புதைய ஆரம்பித்துவிட்டன. டெய்லர் எனெர்ஜி நிறுவனம், இந்த எண்ணெய்க் கசிவை சரி செய்ய முயற்சி செய்தது. வழக்கமான முறையானது கைகொடுக்கவில்லை. மேலும் அவர்கள் எண்ணெய்க் கசிவை சரி செய்வதைவிட அதனை மறைமுகமாக வைத்துக் கொள்வதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர் எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தற்போதும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

டெய்லர் எனெர்ஜி நிறுவனம் மிஸிஸிப்பி எண்ணெய்த் தளத்தின் கசிவைப் பற்றி அப்போது சிறிய அளவில் கடலோரக் காவற்படையிடம் தகவல் அளித்திருந்தது. பொது மக்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. 2008-ம் ஆண்டு லூசியானாவின் கடலோரக் காவல்படை டெய்லர் எனெர்ஜி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய்க் கசிவதாகவும் இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்து இருந்தனர். அந்த ஆண்டே டெய்லர் எனெர்ஜி நிறுவனம் எண்ணெய்க் கசிவை நிறுத்த, சுத்தப்படுத்த 666 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கியது. டெய்லர் எண்ணெய்க் கசிவு 2010-ம் ஆண்டு பொது மக்களுக்குத் தெரிய வந்த போதிலும் எவ்வளவு எண்ணெய் கசிந்திருப்பது என்பது டெய்லர் நிறுவனம் கொடுக்கும் அளவீடாகவே இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து வழக்குப் போராட்டத்துக்குப் பின் 2015-ம் ஆண்டு கடலோரக் காவல் படை, கீரின்பீஸ் (Greenpeace), அஸோஸியேட்டட் பிரஸ் (Associated Press) போன்ற அமைப்புகள் சேர்ந்து ஆராய்ந்ததில் அந்த நிறுவனம் கொடுத்து வந்த அளவுகள் 20 மடங்கு குறைவானவை எனத் தெரியவந்தன. எண்ணெய்க் கசிவை சரி செய்வதற்கான முயற்சிகளும் பெரிதாக எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையில் பொறுப்பேற்றுச் செயல்படுவதற்குப் பதிலாக தப்பிப்பதையே டெய்லர் நிறுவனம் குறிக்கோளாக வைத்துள்ளது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. டெய்லர் நிறுவனம் கொடுத்த அளவீடுகளின்படி நாளொன்றுக்கு 2310 கேலன்கள் வரை எண்ணெய் கடலில் கலப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நாளொன்றுக்கு 29,400 கேலன்கள் எண்ணெய்யும் மொத்தமாக 2004 - 2017 வரை 150 மில்லியன் கேலன்கள் எண்ணெய்க் கசிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Oil spill

இவற்றில் இன்னும் மோசமான நிலை என்னவென்றால் எண்ணெய்க் கசிவின் அளவு முந்தைய நாளின் அளவீட்டை விட நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கசிவை நிறுத்தவில்லையென்றால் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு இந்த எண்ணெய்க் கசிவு நடைபெறும். எண்ணெய்க் கிணறுகளில் இருக்கும் எண்ணெய் வற்றிப்போகும் வரை. வட அமெரிக்காவின் எண்ணெய்க் கசிவு வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய்க் கசிவாக மாறிவிடக்கூடும் எனவும் அச்சம் கொள்கின்றனர். 

ஆனால் இந்த அளவீடுகளெல்லாம் பொய்யானவை, அதற்கான ஆதாரங்கள் இல்லை என டெய்லர் எனெர்ஜி நிறுவனம் வாதிடுகிறது. மேலும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி ஆளான அதன் தலைவர் வில்லியம் பெக்கா (William Pecue), "டெய்லர் எண்ணெய்க் கசிவு ஒரு கடவுளின் செயல், அது ஒரு விபத்து. அதற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது" எனக் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டே டெய்லர் எனெர்ஜி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு பங்குகள் விற்கப்பட்டுவிட்டன என்பது தனித்தகவல். போதுமான அளவு எண்ணெய்க் கசிவை சரி செய்துவிட்டதால் நிதி அளித்த 666 மில்லியன் டாலர்களிலிருந்து 450 மில்லியன் டாலர்கள் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றது. உண்மையில் 28 எண்ணெய்க் கிணறுகளில் ஒன்பது எண்ணெய்க் கிணறுகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக வளமான, அதிக உற்பத்தி உடைய எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலங்களில் மெக்சிகோ வளைகுடா முக்கியமானது. இந்த ஆண்டும் மட்டும் 600 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம். மேலும் 40 பில்லியின் பீப்பாய்கள் நிலத்துக்குள் புதைந்திருப்பதாக அரசின் ஆய்வு கூறுகிறது. ஆனால் காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் வெப்பமான கடற்பகுதிகளில் அடிக்கடி புயல்களை ஏற்படுத்துகின்றன. இப்படி 2004-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள் பல்வேறு சூறாவளிகளும் 150-க்கும் மேலான எண்ணெய்த் தளங்களை பழுதடைய வைத்திருக்கின்றன அல்லது அழித்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 3,30,000 கேலன்கள் கச்சா எண்ணெய் லூசியானவுக்கு அருகில் உள்ள கரைக்கடல் எண்ணெய்த் தளங்களில் இருந்தும் நிலத்தில் உள்ள எண்ணெய்த் தளங்களில் இருந்தும் கடற்பகுதியில் கலக்கின்றன. மேலும் 50,000 மைல்களுக்கு எண்ணெய்க் குழாய்கள் செல்கின்றன. இங்குள்ள எண்ணெய்க் கிணறுகளில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை விபத்து ஏற்படுவதாகவும் இங்கு நடக்கும் விபத்துகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மாசுபாடு என்பது நிலையாக இருக்கக் கூடியது என்பதற்கு டெய்லர் எண்ணெய்க் கசிவு பெரும் உதாரணம். மிகப்பெரிய எண்ணெய்க் கசிவுகள் ஏற்படும்பொழுதுதான் அனைவரின் கவனமும் அங்கு குவிகிறது. ஆனால் தினமும் எண்ணெய்க் குழாய்கள், கப்பல்கள் என ஒவ்வொன்றின் வழி சிறிது சிறிதாக எண்ணெய்க் கசிவு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.  டெய்லர் எண்ணெய்க் கசிவு நிகழ்ந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது, டீப் வாட்டர் ஹாரிசான் விபத்து நடந்தும் எட்டு வருடங்களாகிவிட்டது. ஆனாலும் அமெரிக்க அரசு எண்ணெய்க் கசிவால் கடல் சூழலில் ஏற்பட்ட தாக்கத்தை முழுமையாக அறியவில்லை. எண்ணெய்க் கசிவால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், உயிர்ச்சூழல் இழப்புகளை ஆராய்வதற்குக் கூட சரிவரப் பகுப்பாய்வுகள் எதுவும் இல்லை எனவும் குற்றச்சாட்டு எழும்பி வருகிறது. 

கடலில் ஏற்படும் இந்தக் கசிவுகளை அகற்றுவதற்கு 1971-ல் செயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட சூடோமோனாஸ் பாக்டீரியா எனும் `சூப்பர் பக்’ பயன்படுத்தப்படுகிறது. மெக்சிகோ வளைகுடா விபத்தில் எண்ணெய்யை அகற்றுவதற்கு இவை உதவின. இவற்றை டெய்லர் எண்ணெய்க் கசிவிலும் பயன்படுத்தலாம். ஆனால் அதிக காலம் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க் கசிவை அகற்றுவது சவாலானதுதான். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருக்க வேண்டும் எனப் பலராலும் குரல் எழுப்பப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி டெய்லர் எனெர்ஜி நிறுவனம் எண்ணெய்க் கசிவைச் சுத்தம் செய்ய வேண்டும்; இல்லையென்றால் நாளொன்றுக்கு 40,000 டாலர்கள் அபராதம் கட்ட வேண்டும் எனக் கடலோரக் காவல்படை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதையும் அந்த நிறுவனம் கேட்டபாடில்லை 

அமெரிக்காவில் நிகழும் எண்ணெய்க் கசிவு

மெக்சிகோ வளைகுடாவிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் மண்டலங்களிலும் இத்தனை சிக்கல்கள் இருக்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகமானது, எண்ணெய் மற்றும் தொழில்துறைகளுக்கான குத்தகைகளை அதிகமாக விரிவாக்கம் செய்ய முனைந்து வருகிறது. அமெரிக்காவின் கரைக்கடல்களில் (Offshores) எண்ணெய்த் தளங்களை அதிகப்படுத்தும் வேலை அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எந்தவோர் எண்ணெய்த் தளங்களும் அமைக்கப்படாத அட்லான்டிக் கடலோரமும் எண்ணெய்த் தளங்களை அமைக்கவிருப்பதுதான் வேடிக்கை. அங்கே சாதாரணமாகவே புயல்களும், சூறாவளிகளும் இருமடங்கு இருக்கும். இந்தத் திட்டத்துக்கு கடற்கரையோர மாகாணங்களின் ஆளுநர்களே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலில் இந்த மோதல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றின் தாக்கங்கள் அதிகமாகி வரும் வேளையில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைத் தவிர்த்து மாற்று (மரபுசாரா) எரிபொருள் சக்தியைப் பயன்படுத்துவது குறித்து உலகின் பல நாடுகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் இந்த எண்ணெய்க் கசிவும், எண்ணெய் மற்றும் எரிபொருள் மண்டலங்களும் அதிர்ச்சியான விஷயம்தான்.


டிரெண்டிங் @ விகடன்