வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:47 (08/12/2018)

`பாகிஸ்தானுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக பா.ஜ.க செயல்படுகிறது’ - இம்ரான்கான் குற்றச்சாட்டு!

இம்ரான் கான்

ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார் இம்ரான் கான். அப்போது, “இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறேன். இருநாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வேன்” என்றார். இதையடுத்து, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு, இம்ரான்கான் நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில், இந்தியா - பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

“இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், இந்தியா அதைப் புறந்தள்ளுகிறது. இந்தியாவை இப்போது ஆளும் அரசு, பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணுகுமுறை கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் முடிந்ததும், மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம்” என்று கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், மும்பை குண்டுவெடிப்பு குறித்தும் இம்ரான் கான் பேசியுள்ளார். “மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமும். ஏனென்றால், அது தீவிரவாதச் செயல். அந்த வழக்கின் நிலையை ஆராய அரசுக்கு ஆணையிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.