"அன்பு;அக்கறை; கருணை தேவை” - வனஸா போன்ஸை உலக அழகியாக்கிய அந்த வார்த்தைகள்!#MissWorld2018 | Ponce de leon crowned Miss World 2018

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:05:00 (09/12/2018)

"அன்பு;அக்கறை; கருணை தேவை” - வனஸா போன்ஸை உலக அழகியாக்கிய அந்த வார்த்தைகள்!#MissWorld2018

2018ம் ஆண்டுக்கான ‘உலக அழகி’ பட்டத்தை, மெக்சிகோவைச் சேர்ந்த வனஸா போன்ஸ் டி லியோன் வென்றிருக்கிறார்.

உலக அழகி

68-வது ’உலக அழகி’ பட்டம் வழங்கும் விழா, சீனாவில் உள்ள சான்யா நகரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 118 அழகிகள், அரங்கில் அணிவகுத்தனர். பல்வேறு பரீட்சைகளை தாண்டி, உகாண்டா, ஜமைக்கா, தாய்லாந்து,பெலாரஸ், மெக்சிகோ ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த அழகிகள், இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர். அதில், மெக்சிகோவின் வனஸா போன்ஸ் டி லியோன், 2018ம் ஆண்டின் ‘உலக அழகி’யாக அறிவிக்கப்பட்டார். அறிவிப்பைக் கேட்டதும், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார், 26 வயதான போன்ஸ். அவருக்கு, கடந்தவருட உலக அழகி மனுஷி ஷெல்லர் மகுடத்தை சூட்டினார்.

’உலக அழகி’ பட்டம் வெறும் அழகுக்கானது மட்டுமல்ல, அறிவுக்குமானது. அழகு சார்ந்த போட்டிகளுடன், அறிவு சார்ந்த போட்டிகளும் நடத்தப்படும். அதில் முக்கியமானது, இறுதிச்சுற்றில் நடத்தப்படும் கேள்வி - பதில் பகுதி. புத்தியில் இருந்து வரும் பதில்களைவிட , மனதில் இருந்து வரும் பதில்களே, வெற்றியை கொடுக்கும். அந்த வகையில், "உலக அழகி பட்டத்தை கொண்டு என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வியை, போன்ஸிடம் முன்வைத்தார்கள் முன்னாள் அழகிகள். அதற்கு, ”உதாரணமாக இருப்பேன்” என்று போன்ஸ் சொன்னபோது, அரங்கில் அப்ளாஸ் அள்ளியது. தொடர்ந்து, “உதவி வேண்டுபவர்களுக்கு, முடிந்தவரை உதவுவேன். அவர்களின் அருகில் இருக்க முயல்வேன். அன்பும் அக்கறையும் கருணையும் தான் உதவுவதற்கான அடிப்படை. அது அவ்வளவு கடினமானதல்ல” என்றும், பதிலளித்தார். இந்தப் பதிலே, போன்ஸை ’உலக அழகி’ ஆக்கியுள்ளது. மெக்சிகோவில் இருந்து, முதன்முறையாக ‘உலக அழகி’ மகுடம் சூடுபவராகவும் மாற்றியுள்ளது.


[X] Close

[X] Close