வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (10/12/2018)

ஜமாலின் கடைசி நிமிட ஆடியோ! - சவுதிக்கு எதிராக துருக்கியின் அடுத்த `செக்'

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி இறப்பதற்கு முன்னர் பேசிய ஆடியோவை, துருக்கி போலீஸார் தற்போது கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி

சவுதி அரசையே அசைத்துப்பார்த்த ஒரு சம்பவம்தான், ஜமால் கஷோகிஜியின் உயிரிழப்பு. சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், ஆரம்பத்தில் சவுதி அரசு பற்றி சிறந்த செய்திகளை எழுதிவந்தார் . பிறகு, இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்ததும், தன் நிலைப்பாட்டை மாற்றி, சவுதி அரசுக்கு எதிராக எழுதத் தொடங்கினார். இதையடுத்து, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) நிறுவனத்தில் இணைந்தார்.  அங்கு சென்றும்கூட சவுதி அரசையும், அரசர் பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்துவந்தார். 

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இதனால், பத்திரிகையாளர் ஜமாலை தீர்த்துக்கட்ட முடிவுசெய்திருந்தது சவுதி அரசு. இதனிடையே, தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள ஜமால் துருக்கி சென்றிருந்தார். அப்போது, இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பத்திரிகையாளர் ஜமால் காணாமல்போன விஷயம், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொல்லப்பட்டுள்ளார். இவரைக் கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட குழு இஸ்தான்புல்லுக்குச் சென்றுள்ளது என்பதுபோன்ற விஷயங்களைத் துருக்கி அரசு கண்டுபிடித்து வெளியிட்டது. பிறகு, ஜமால் கொலைசெய்யப்பட்டுள்ளார் என அமெரிக்காவும் அறிவித்தது. 

காதலி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி

ஜமால் இறப்புக்குப் பிறகு, துருக்கி அரசுக்கும் சவுதி அரசுக்கும் பெரும் வார்த்தைப் போர் நிலவிவருகிறது. 'ஜமாலை நாங்கள் கொலை செய்யவில்லை' என சவுதி கூறிவருகிறது. இருப்பினும், ஜமால் கொலைக்கு சவுதி அரசுதான் காரணம் எனக் கூறி, அதற்கான பல அதிர்ச்சிகர ஆதாரங்களைக் கண்டுபிடித்து, தொடர்ந்து வெளியிட்டுவருகிறது துருக்கி. `ஜமால் கொலை எங்கள் மண்ணில் நடந்தது, இதில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதைக் கண்டுபிடித்தே தீருவோம்' என்ற முனைப்பில்  செயல்பட்டுவருகிறது துருக்கி. 

இந்த நிலையில், ஜமால் இறப்பதற்கு முன்பு  ‘ என்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் சுவாசிக்க முடியவில்லை' எனக் கதறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜமாலின் கடைசி நிமிட ஆடியோவை துருக்கியின் உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் பதிவான குரல்களை மொழிபெயர்த்தவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த ஆடியோவின் மூலம் ஜமால் சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜமால் கஷோகிஜி கொலை தொடர்பாக சில போன்கால் பதிவுகளையும் துருக்கி கண்டுபிடித்துள்ளது. அதில், ஜமால் இறப்பதற்கு முன்னதாக அவரைக் கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டம் போன்ற ஆடியோக்கள் இருந்ததாகவும், அந்த போன் கால்கள் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடமிருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது கிடைத்துள்ள இந்த ஆடியோ ஆதாரங்கள், சவுதி அரசுக்கு இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.