வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:43 (10/12/2018)

``இலங்கை அரசியல் நெருக்கடி சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்" - பேராசிரியர் இராமு. மணிவண்ணன்!

``இலங்கை அரசியல் நெருக்கடி சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்

இலங்கையில் கடந்த அக்டோபர் 26--ம் தேதி ராஜபக்‌ஷேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்ததிலிருந்து, அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கை அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்றம் செயல்படவில்லை அதிபரின் உத்தரவுகளுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை, ராஜபக்‌ஷே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அதிபர் சிறிசேனா ஏற்காதது எனப் பல்வேறு குழப்பங்கள் அங்கு நிலவி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய சர்ச்சைகளின் பின்னணி குறித்து பேராசிரியர் இராமு மணிவண்ணனிடம் பேசினோம்".

"இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தற்செயலானதா அல்லது உருவாக்கப்பட்டதா?"

"இது தற்செயலானது அல்ல. இலங்கை அரசியல் அமைப்பே இதுமாதிரியான சூழலை பலமுறை மீண்டும், மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு தேர்தலின்போது, இலங்கையில் பிரதான இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்தன. `ராஜபக்‌ஷேவைத் தடுக்க வேண்டும்' என்கிற ஒரு பொதுவான காரணத்தைத் தவிர, வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் உருவான அணி அது. தற்போதைய சூழல் என்பது சிங்கள மேட்டுக்குடிகளுக்கிடையே நடக்கக்கூடிய அதிகாரப் போட்டிதான்".

"இலங்கை அரசியலின் இன்றைய குழப்பத்துக்கான மையப்புள்ளி எது?"

"இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. மைத்ரிபால சிறிசேனா மற்றும் ரனில் விக்ரமசிங்கே இடையே பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் முதல் காரணம். இரண்டாவதாக, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்‌ஷேவின் கை ஓங்கியது. அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு ராஜபக்‌ஷே வெற்றிபெறலாம் என்கிற நிலைமை உள்ளதால், தற்போதைய அரசு பலவீனமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் ராஜபக்‌ஷே ஏதாவதொரு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் சிறிசேனாவுக்கு ஏதாவதொரு விதத்தில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற தேவை உள்ளது. அதுதான் தற்போதைய குழப்பத்துக்கான மையக்காரணமாக உள்ளது".

"இலங்கையில் பெரும்பான்மையான தரப்பினரின் இந்த ஆதிக்கப் போட்டியினால் தமிழர்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படும்?"

"தற்போதைய சிங்கள அரசியல் குழப்பத்தில் தமிழர்களுடைய பிரச்னைகள் என்பது பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கப்படும். தமிழர்களின் பறிக்கப்பட்ட நிலங்கள், காணாமல் போனவர்கள் உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கைப் போராட்டங்களே முடியாமல் இருக்கின்றன. கொழும்புவிலிருந்து யார் ஆட்சி செய்தாலும் தமிழர்களுடைய நிலை என்பது ஒன்றுதான். தற்போதைய சூழலில் அவர்களுக்குப் பாதிப்பு என்பது ஏற்கெனவே சந்தித்ததைவிடவும் பெரிதாக ஒன்றுமில்லை. இலங்கை அரசியலில் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்திலேயே பிரச்னை இருக்கிறது. சம்பந்தன் தலைமையில் இயங்குகிற தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், 'இலங்கையில் நிலையான அரசு ஏற்பட வேண்டும்' என்றுதான் பேசுகிறார்களே தவிர, தமிழர்களுடைய பிரச்னைகளையோ, தமிழர்கள் இழந்த உரிமைகளையோ முன்னிறுத்திப் பேசுவதில்லை. தமிழர்கள் சந்திக்கிற பிரச்னைகளைப் பேசாமல் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவில்லை".

"இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்கு உலக நாடுகள் பலவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மௌனம் காப்பதன் பின்னணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"இந்தியா பேசாமல் இருப்பதே ஒரு நிலைப்பாடாகத்தான் பார்க்கப்படுகிறது. சிங்கள ஆட்சியாளர்களிடையே இந்தியாவுக்கு எந்தவொரு செல்வாக்கும் கிடையாது. தமிழர்கள் பிரச்னையில் சிங்கள ஆட்சியாளர்களும் சமரசம் செய்து கொள்வதாக இல்லை. இந்தியாவுக்கு சிங்கள ஆட்சியாளர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்றொன்று யார் ஆட்சி அமைப்பார்கள் என்று தீர்மானிக்கக்கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 14, 15 உறுப்பினர்கள், சரியாக வழிநடத்தினாலே போதும் என்கிற நிலையில்தான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் எதுவொன்றும் செய்ய முடியாத நிலையில்தான் இருக்கிறது".

"இலங்கை மீதான சீனா, அமெரிக்க நாடுகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது?"

"இரண்டு தரப்புகளிலுமிருந்து பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பாக 2010-க்குப் பிறகு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ராஜபக்‌ஷே தன் ஆட்சியில் இந்தியாவை எதிர்கொள்ள சீனாவை இலங்கையில் வலுவாகக் காலூன்ற வைத்தார். சீனாவுக்கும் இந்தியப் பெருங்கடலில் தன்னுடைய வணிகத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையில் இருப்பு முக்கியமானதானது. இந்தியாவுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள வெற்றிடமும் சீனாவுக்கு சாதகமாகிவிட்டது. அமெரிக்காவுக்கும் திரிகோணமலையில் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இலங்கையில் இருப்பு அவசியமாகிறது. அதற்குப் பொருளாதார முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளைக் கையாள்கின்றன. மேலும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விஷயங்களில் சர்வதேச தளத்தில் இலங்கையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றன".


"இப்போது இருக்கும் நெருக்கடியை தமிழ் தேசியக் கூட்டணி எவ்வாறு கையாள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?".

"2010-க்குப் பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னை நேர்மையான பிரதிநிதித்துவம் இல்லாததுதான். வடக்கு, கிழக்குப் பகுதிமக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பார்க்கமுடியாது. ஜனநாயகம் என்பதை கொழும்புவில் மட்டும்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசுகிறார்கள். தற்போதைய சம்பவங்கள் ஜனநாயகத்துக்குப் பின்னடைவு என்று சொல்கிறார்கள். ஆனால், ஜனநாயகமே இல்லாமல்தான் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்".

"அதிபர் சிறிசேனா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரின் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடைகளை நீதிமன்றம்விதித்திருக்கிறது. இது, வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனிதவுரிமை மாநாட்டில் எப்படிப் பிரதிபலிக்கும்?"

"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைப் பொறுத்தவரை, மறைப்பதற்கு ஒன்றுமே கிடையாது. மேற்கத்திய நாடுகளுக்கும் ஐ,நா. மன்றத்திற்கும் இது தெரியாமல் இல்லை. ஆனால், இப்போது தேவைப்படுவது சட்டரீதியான தீர்வுதான். சிங்கள ஜனநாயக வரையறைக்கு உட்பட்டு பார்த்தால், அதிபர் சிறிசேனாவின் செயல் அதிகார மீறல்தான்".

"இலங்கையின் தற்போதைய அரசியல் சிக்கலுக்கான தீர்வு அல்லது இந்தப் பிரச்னை எதை நோக்கி நகரும் என எதிர்பார்க்கிறீர்கள்?"

"இது அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்குத்தான் இட்டுச் செல்லும். ராஜபக்‌ஷே பிரதமராக இருந்தாலும் நாடாளுமன்றம் செயல்படாது. யார் ஆட்சியில் இருந்தாலும் சிங்களப் பேரினவாதம்தான், இலங்கையின் மைய நீரோட்ட அரசியல். இலங்கை அரசியலில் ராணுவம் மிகப்பெரிய பங்காற்றுவதை எதிர்நோக்கியே  இருக்கிறது. ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பலரும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் முன்னணிப் பொறுப்பில் இருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்தை நிலைநிறுத்தக்கூடிய அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை நோக்கியே இலங்கை அரசியல் நகர்கிறது"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்