வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:27 (10/12/2018)

‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு

'பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்' என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

விஜய் மல்லையா

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டு வர லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாள்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இதற்கிடையில், `பொதுத்துறை வங்கிகளில் நான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டதாக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர்.  அனைத்தும் பொய். நான், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டதாகக் கூறும் இவர்கள், நான் பணத்தைத் திருப்பிச் செலுத்துகிறேன் என கர்நாடக நீதி மன்றத்தில் கூறியதை ஏன் கூற மறுக்கிறார்கள். நான் வாங்கிய தொகை 100 சதவிகிதத்தையும் கொடுத்துவிடுகிறேன் எனத் தொடர்ந்து கூறிவருகிறேன். தயதுசெய்து அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் கொடுக்கும் தொகையைப் பெற்றுக்கொண்டால், வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை’ எனக் கூறியிருந்தார். 

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம்

இந்நிலையில் இன்று, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையாவை நாடுகடத்துவது தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு, குறிப்பிட்ட நேரத்தை விட 15 நிமிடங்கள் தாமதாகவே தொடங்கியது. முதலில், மல்லையா தரப்பு இறுதி வாதங்கள் கேட்கப்பட்டன. அதில், ‘' என் தொழிலாளர்கள்தான் எனக்கு முக்கியம். நீதிமன்றத்துக்கு வழங்கிய பணத்தை நான் என் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என இரு முறை மனு தாக்கல்செய்தேன். ஆனால் அந்த மனு தொடர்பாக இதுவரை எந்தப் பதிலும் நீதிமன்றம் வழங்கவில்லை. என்னை இந்தியாவுக்கு அனுப்ப நீதிமன்றம் முடிவுசெய்தால், முதலில் என் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குங்கள்'’ என்று பேசினார். 

இதன் பிறகு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். முன்னதாக, இந்தியாவில் உள்ள சிறைச் சாலையில் காற்று, மின்சாரம் போன்ற வசதிகள் இல்லை என மல்லையா தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது. இதன்பிறகு, அவரை அடைக்க உள்ள ஜெயிலின் வீடியோவை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு இந்திய சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.