வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (12/12/2018)

கடைசி தொடர்பு:21:10 (12/12/2018)

ஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை!

ஒரு டன் சாக்லேட், சாலை முழுதும் ஆறாக ஓடினால்? அதுதான் நடந்திருக்கிறது ஜெர்மனியில். ஜெர்மனியில் வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திரவ சாக்லேட் ஊற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான டேங்க் உடைந்ததால், அதிலிருந்து ஏறத்தாழ ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லேட் சாலையில் ஆறாக ஓடியது.

ஆறாக ஓடிய சாக்லேட்

Image Source : Reuters

அங்கிருக்கும் குளிர் காரணமாக, சில நிமிடங்களில் திரவ சாக்லேட் இறுகிக் கட்டியாக ஆனதால், அங்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அந்தச் சாலை மூடப்பட்டது.  சில மணி நேரம் அங்கு போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. 25 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சேர்ந்து மண்வெட்டி,  சுடுநீர், நெருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, மிகுந்த சிரமத்துடன் அதை  அகற்றி, போக்குவரத்தை  சீர்செய்திருக்கிறார்கள்.

Image Source : Reuters

உலகில், மிக அதிகமாக சாக்லேட் தயாரிக்கும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி, ஜெர்மன் சாக்லேட்டுகள்  உலகப் பிரசித்தம். அங்குள்ள கொலோன் என்னும் நகரம், உலகின் சாக்லேட் தயாரிப்பின் தலைநகரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்களுக்கு ஜெர்மன் சாக்லேட்டுகள் ஏற்றுமதிசெய்யப்படுகிறது. அதுவும், இது கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் என்பதாலும், சாக்லேட்டுகளுக்கான மவுசு அதிகமாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாலையில் கொட்டிய ஒரு டன் சாக்லேட்டினால், அதன் தயாரிப்பு எதுவும் பாதிக்கப்படாது எனவும், இரண்டு தினங்களில் மீண்டும் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என்றும் ட்ரேமேய்ஸ்டெர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.