வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (14/12/2018)

சிங்கப்பூரில் 1 டாலர் லஞ்சம் பெற்றவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை!

சிங்கப்பூர் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கும் நாடு. லஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே பேணி செயல்படும் அரசு இங்கு செயல்படுகிறது. உபரி பட்ஜெட் போட்டால் எஞ்சியதை மக்களுக்குப் பகிர்ந்து அளித்துவிடும் நாடு. உலகிலேயே 6-வது ஊழல் குறைந்த நாடு சிங்கப்பூர் ஆகும். தனியார்த்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்சம் பெற்றால் கடும் தண்டனை வழங்கப்படும். அந்த வகையில், 1 சிங்கப்பூர் டாலர் லஞ்சம் வாங்கிய சீன நாட்டைச் சேர்ந்த இருவர் இப்போது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் டாலர்

சீன நாட்டைச் சேர்ந்த ஜெங் ஜிலியாங் வயது (47) சாவ் யூசுன் வயது (43) இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் கண்டெய்னர் சரக்குப் பெட்டகம் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.  ஃபோர்க் லிஃப்ட் எனப்படும் சரக்கு ஏற்றும் மெஷினைக்கொண்டு கண்டெய்னர்களில் பொருள்களை நிரப்புவதே இவர்கள் பணி. கண்டெய்னர்களை தாமதமில்லாமல் விரைவில் நிரப்பி அனுப்புவதற்காக ட்ரெக் டிரைவர் ஒருவரிடம்  1 சிங்கப்பூர் டாலர் (ரூ.52) லஞ்சம் பெற்றுள்ளனர். குற்றச்சாட்டு குறித்து, சிங்கப்பூர் ஊழல் எதிர்ப்பு முகமை விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, 1,00,000 சிங்கப்பூர் டாலர்களும் அபராதம் விதிக்கப்பட்டது. 

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் சம்பளத்தைத் தவிர வேறு எந்த ஆதாயத்தையும் பெறக் கூடாது. பணியில் உண்மையும் நேர்மையும் அவசியம். லஞ்சமாகப் பெற்றது ஒரு டாலர் என்பது விஷயம் அல்ல. ஒரு டாலரோ ஆயிரம் டாலரோ லஞ்சம் லஞ்சம்தான். சிங்கப்பூரில் லஞ்சம் எந்த உருவில் இருந்தாலும் தண்டனை உறுதி'' என்று சிங்கப்பூர் லஞ்ச ஒழிப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பிடிபட்டது ஒரு டாலருக்காக என்றாலும் இவர்கள் இதே போன்று பல டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று லஞ்சம் ஒழிப்பு முகமை தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க