`இது எங்கள் சுய மரியாதைக்கான செயல்' - காந்தி சிலையை அகற்றிய கானா பல்கலைக்கழகம் | Gandhi statue removed from University of Ghana

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (14/12/2018)

`இது எங்கள் சுய மரியாதைக்கான செயல்' - காந்தி சிலையை அகற்றிய கானா பல்கலைக்கழகம்

 ‘காந்தி ஒரு நிற வெறுப்பாளர்' என்று கூறி அவரின் சிலையை நீக்கியுள்ளது `கானா பல்கலைக்கழகம்.'

காந்தி சிலை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் காந்தியின் சிலை திறந்துவைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையின் அடையாளமான சிலை என்று இந்திய அரசால் கூறப்பட்டது. ஆனால், சிலை நிறுவப்பட்டது முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் காந்தி சிலையை நீக்க வேண்டும் என்ற தொடர் சர்ச்சை வெடித்தது. 

காந்தி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலங்களில் கறுப்பின மக்களைப் பற்றி தாழ்வாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், மேலும் கறுப்பின மக்களைவிட இந்தியர்கள் மேலானவர்கள் போன்ற பாகுபாட்டை வெளிப்படுத்தியதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினார். மேலும் காந்தியின் சிலையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கறுப்பின மக்களுக்காகப் போராடிய தலைவர்களின் சிலையை நிறுவ வேண்டும் என்று முறையிட்டு வந்தனர். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு கெடாமல் இருக்கவும் வன்முறைகளைத் தவிர்க்கவும் சிலையை வேறு இடத்தில் நிறுவுவதாகக் கானா அரசு உறுதியளித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், தற்போது காந்தியின் சிலை பல்கலைக்கழகத்தாரால் நீக்கப்பட்டுள்ளது. 

காந்தி

இது எங்கள் சுய மரியாதைக்கான செயல் என்கிறார் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் நாடகப் பேராசிரியர் Obadele Kambon. இது கானாவின் ஒட்டுமொத்த மக்களுக்கான வெற்றி, நாங்கள் தாழ்வானவர்கள் இல்லை என்பதற்கான வெளிப்பாடு என்கிறார் பல்கலைக்கழக மாணவர் பெஞ்சமின் மென்சா. இது பல்கலைக்கழகத்தின் உள் விவகாரம் என்று குறிப்பிட்டுள்ளது கானாவின் வெளியுறவுத்துறை. `அஷ்வின் தேசாய் மற்றும் கூலம் வஹீத்' எழுதிய காந்தியின் தென்னாப்பிரிக்க நாள்களைப் பற்றிய 'The South African Gandhi, Stretcher and Bearer of Empire' என்ற நூல்,பிரச்னைகளுக்கு மேற்கோளாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் போற்றப்படும் ஒரு தலைவரை பற்றிய இச்செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.