மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் !’ | Few samples of Johnson & Johnson baby powder has asbestos, says Reuters

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (15/12/2018)

கடைசி தொடர்பு:12:35 (17/12/2018)

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் !’

பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டி அம்மாக்கள் பாசத்துடன் உடலெங்கும் பூசிவிடும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது  Reuters நிறுவனம். 

பேபி பவுடர்


இந்தியாவைப் பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேபி பவுடர் என்றாலே ஜான்சன் அண்ட் ஜான்சன்தான். 2016-ம் ஆண்டு ஹிமாலயா நிறுவனம் பேபி பவுடர் தயாரிப்பில் இறங்கியது. அதன் பின்னர் ஹிமாலயாவின் தாய்சேய் நலப் பொருள்களை மக்கள் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனாலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளின் மவுசு குறையவில்லை. பிறந்த குழந்தைகளைப் பார்க்க வரும் உறவினர்களும் நண்பர்களும் Johnson's Baby Kit வாங்கி கிஃப்ட்டாகக் கொடுப்பது வழக்கம். இந்தியாவைவிட வெளிநாடுகளில் ஜான்சன் தயாரிப்புகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஈவா எக்கேவார்ரியா என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். 

ஜான்சன் அண்ட் ஜான்சன்
 

கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், `நான் 11 வயது முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வருகிறேன். அதனால் எனக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனக்கு உரிய இழப்பீடு வேண்டும்’ என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், `ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு  417 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அந்தச் சமயத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது மேலும் பல பெண்கள் குற்றம்சாட்டினர். ஆனால், அதன் பிறகு மெல்ல மெல்ல மக்கள் அந்த விவகாரத்தை மறந்துவிட்டனர். தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. Reuters செய்தி நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.  

டெக்சாஸில் உள்ள ஒரு சிறிய நகரமான லும்பர்ட்டனில் மசாஜ் பள்ளி வைத்து நடத்தி வந்தவர் டார்லீன் காக்கர். இவருக்கு இரண்டு மகள்கள். மகள்களை வளர்த்து ஆளாக்கிய நிம்மதியில் இருந்த டார்லீனுக்கு திடீரென உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு மெசோதெலியோமா என்னும் நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. டார்லீனுக்கு வந்திருப்பது மிகவும் ஆபத்தான புற்றுநோய் என்பதை அறிந்த அவரின் மகள்கள் அவருக்கு எதனால் இது ஏற்பட்டது என்ற கேள்விக்கு பதில் தேட தொடங்கினர். ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) துகள்களை நுகர்வதால் ஏற்படக்கூடிய இந்தப் புற்றுநோய் பெரும்பாலும் தொழிற்சாலை, சுரங்கம், கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்பவர்களைத்தான் பாதிக்கும். அப்படியிருக்க டார்லீனுக்கு எப்படி ஏற்பட்டது.

குழந்தை
 

டார்லீன் தான் சிறிய வயதிலிருந்து தொடர்ந்து பயன்படுத்திவரும் அழகு சாதன பொருள்களை நினைவுகூர்ந்தார். அப்போதுதான் அவரின் பார்வை ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருள்கள் மீது திரும்பியது. காரணம். அவர் சிறு வயது முதல் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளைத்தான் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக ஜான்சன் பேபி பவுடர். சிறுக சிறுக உயிரிழந்துகொண்டிருந்த டார்லீன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்நிறுவனமோ  `எங்கள் தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் சிறிதளவுகூட  இல்லை’ என்று நீதிமன்றத்தில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தது. அதன் பிறகு டார்லீனால் போராட முடியவில்லை. நீதிமன்றத்தில் வாதாட, ஜான்சன் நிறுவனத்தின் உள் அறிக்கைகள் மற்றும் பிற ரகசிய ஆவணங்களை அவரால் திரட்ட முடியவில்லை. எனவே வழக்கைக் கைவிட்டார். இவையனைத்தும் நடந்தது 1999-ல். 

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு டார்லீன் தேடிக்கொண்டிருந்த ஆவணங்கள் தற்போது வெளியே கசியத் தொடங்கியுள்ளன. காரணம் ஜான்சன் நிறுவனத்தின் மீது 11,700 பேர் வழக்குத் தொடுத்துள்ளனர். அவர்கள் அனைவருமே அந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்கள் கலந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். ஆவணங்களை வெளியிட வேண்டிய சூழலுக்கு ஜான்சன் நிறுவனம் தள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களை Reuters நிறுவனம் அலசி ஆராய்ந்தது. 1972-ம் ஆண்டிலிருந்து 1975 வரையிலான  இடைவெளியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் வேவ்வேறு ஆய்வகங்களில் மூன்று முறை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகளில் சில சாம்பிள்களில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களுக்காகத்தான் டார்லீன் மரணப்படுக்கையிலும் போராடினார். ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் துகள்கள் கலந்திருப்பது அந்நிறுவனத்துக்கு 1972-ம் ஆண்டே தெரிந்திருக்கிறது என்பதுதான் இதில் அதிர்ச்சி செய்தி. அண்மையில் ஜூலை மாதம் நியூயார்க்கில் ஒரு பெண் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 4.69 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துகொண்டே இருக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். ஆனால், இன்றுவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. 

டார்லீனின் மகள்கள்

Credits : Reuters

புற்றுநோயுடனும் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராகவும் போராடி வந்த டார்லீன் 2009-ம் ஆண்டு மரணித்தார். டார்லீனின் மகள்கள் தங்கள் தாயின் மரணத்தைப் பற்றி பேசுகையில், `அம்மா சாகும் தருவாயில்கூட ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட போராடினார். ஆனால் முடியவில்லை. நாங்கள் குழந்தையாக இருந்தபோது எங்கள் அம்மா எங்கள் உடல் முழுவதும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரைப் பூசி விடுவார்கள். எங்களுக்கும் புற்றுநோய் வந்துவிடுமோ, இருக்குமோ என்ற அச்சத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
 Reuters நிறுவனம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளன.   `எங்கள் தயாரிப்புகளில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இல்லை. ராய்டர்ஸ் நிறுவனம் ஒருசார்பாகச் செய்தி வெளியிட்டுள்ளது’ என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.  

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரம் குறித்து  சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், `எந்த டால்கம் பவுடராக இருந்தாலும் பெண்கள் பிறப்புறுப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால்கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று எச்சரித்துள்ளது. 

`குழந்தைகளுக்கு டால்கம் பவுடரை அதிகளவில் உடல் முழுவது பூசிவிடும் போது உடலில் உள்ள வியர்வைத் துவாரங்களை அடைத்துவிடுகின்றன. எனவே குழந்தை உடலில் வியர்வை வெளியேறாது. மேலும் பவுடரை குழந்தைகள் நுகரும் போது நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது’ எனக் குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

Source : Reuters

நீங்க எப்படி பீல் பண்றீங்க