‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள் | Cambodia Seizes Record 3-Tonne Haul Of African Ivory

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:08:13 (17/12/2018)

‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்

கம்போடியா நாட்டு துறைமுகத்தில், சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 3 டன் அளவிலான யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன.

யானை தந்தங்கள்

ஆப்பிரிக்காவில், தந்தங்களுக்காக சர்வ சாதாரணமாக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. யானைகள் என்றாலே பலசாலிகள்தான். அதிலும் ஆப்பிரிக்கா யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த வகை யானைகளுக்கு அகலமான காதுகள், நீளமான தும்பிக்கைகள் இருக்கும். உலகச் சந்தைகளிலும் யானைகளின் தந்தத்திற்கும் அவற்றால் செய்யப்படும் பொருள்களுக்கும்  நல்ல மதிப்பு உண்டு. இதன் காரணமாகவே யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

கம்போடியா

இந்நிலையில், கம்போடியா நாட்டில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 3.5 டன் அளவிலான யானைத் தந்தங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் அளித்த தகவலின் பேரில், PhnomPenh port துறைமுகத்தில் இருந்த யானைத் தந்தங்களை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பளிங்குக் கற்கள் ஏற்றிவந்த கன்டெய்னரில் சுமார் 1,026 தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த கன்டெய்னர், ஆப்பிரிக்க நாடான Mozambique பகுதியில் இருந்து கடந்த ஆண்டு கம்போடியாவுக்கு வந்தடைந்துள்ளது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதை இங்கிருந்து எந்த நாட்டுக்கு எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. கம்போடியா துறைமுகத்தில் அதிக அளவில் பிடிபட்ட தந்தங்கள் இவைதான் என்றனர்.

மலேசியா

தாய்லாந்து, மலேசியா ஆகிய பகுதிகளில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சட்ட விரோதமாகத் தந்தங்கள் அனுப்பப்படுகின்றன. யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதற்கு மலேசிய துறைமுகங்கள் முக்கிய இடங்களாகத் திகழ்வதாக டிராபி என்ற அமைப்பு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தது. மலேசியாவில் சட்ட விரோதமாகத் தந்தங்கள் பரிமாற்றம் செய்வதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. தாய்லாந்து, மலேசியா போன்றவை கம்போடியாவின் அண்டை நாடுகள். எனவே, Mozambique -வில் இருந்து கொண்டுவரப்பட்ட தந்தங்களைக் கடத்தல் கும்பலைக் சேர்ந்தவர்கள் இங்குப் பதுக்கிவைத்திருக்கலாம்.