வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (17/12/2018)

கடைசி தொடர்பு:19:41 (17/12/2018)

`அலெக்ஸா இருக்க பயமேன்!’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி

லண்டனில் கிளி ஒன்று அமேசான் இணையதளத்தில் பல்வேறு உணவுப்பொருள்களை ஆர்டர் செய்து, உரிமையாளருக்கு அன்புத்தொல்லை கொடுத்துள்ளது. மேலும், சுட்டித்தனமான அந்தக் கிளி செய்யும் குறும்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அமேசானில் ஆர்டர் செய்த கிளி

PC: National Animal Welfare Trust

அட்டகாசம் செய்து அலற வைக்கிறது அந்தக் கிளி. `என்னா சேட்ட' என்று சொல்லும் அளவுக்கு, குறும்புத்தனத்தின் உச்சகட்டங்களை நிகழ்த்தி வருகிறது. லண்டனில் உள்ள `தேசிய விலங்குள் நல அறக்கட்டளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார் மேரியன் விஸ்ஜிவஸ்கி. அங்கிருந்த ரோக்கோ என்ற கிளியின் குறும்புத்தனத்தால் ஈர்க்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார். இந்தக் கிளி குறித்து அவர் கூறும்போது, `ரோக்கோ ஒரு ரொமான்டிக் கிளி. அதுக்கு நடனம் ஆடுவது பிடிக்கும்' என்றெல்லாம் சிலாகித்துப் பேசியுள்ளார். இப்படி கிளியை ரசிக்கும் அவருக்கு அவ்வப்போது அந்தக் கிளியால் பல்வேறு தொல்லைகளும் ஏற்படுவதுண்டு. அது செய்யும் அட்டகாசங்கள் நமக்கு வியப்பைத் தரும் வகையில் அமைந்துள்ளன. அப்படி ரோக்கோ செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் அமேசானில் ஆர்டர் செய்த சுவாரஸ்ய சம்பவம். அன்று பணி நிமித்தமாக மேரியன் வெளியே சென்றுள்ளார். மேரியன் இல்லாத சூழலை ரோக்கோ தனக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொண்டது.  

கிளி

PC: National Animal Welfare Trust

வீட்டிலிருந்த அமேசான் அலெக்சாவைப் பயன்படுத்தி ரோக்கோ, தனக்குத் தேவையான உணவுப்பொருள்களை ஆர்டர் செய்துள்ளது. அதில் தர்பூசணி, உலர் திராட்சைப் பழங்கள், ப்ரோக்கோலி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த ஆர்டர் தொடர்பான அறிவிப்பு மேரியானுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தன் கணவன் மற்றும் மகனிடம் விசாரித்தபோது அவர்கள், `நாங்கள் ஏதும் ஆர்டர் செய்யவில்லை' என தெரிவித்துவிட்டனர். பின்னர் கிளிதான் இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்தது. எப்போவோ ஒருமுறை அவர்கள் பேசியதை உள்வாங்கிக்கொண்ட கிளி, அவர்கள் இல்லாதபோது அதேபோல பேசி ஆர்டர் செய்துள்ளது தெரியவந்தது. அது மட்டுமின்றி அந்த வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான பூனை போலவும் அந்தக் கிளி பேசுமாம். `கிளி ஆர்டர் செய்ததை நான் கேன்ஸல் செய்துவிட்டேன். இது முதன்முறையில்லை இதுபோல் பல விசித்திரமான விளையாட்டுகளை ரோக்கோ செய்துள்ளது'' என்று பேரியாட் தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போல தற்போது பறவைவகளும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன.