வெளியிடப்பட்ட நேரம்: 06:47 (18/12/2018)

கடைசி தொடர்பு:07:54 (18/12/2018)

பிரேசிலை அதிரவைத்த மதபோதகர்- குவியும் பாலியல் வன்கொடுமை புகார்கள்

பிரேசிலில் 300 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

மதபோதகர்

பிரேசிலைச் சேர்ந்த மதபோதகர் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா (João Teixeira de Faria).இவர் தன்னை ‘கடவுளின் தூதன்’ என்று கூறிக்கொண்டு வந்துள்ளார். 1976-ம் ஆண்டு முதல்  Abadiânia எனுமிடத்தில் ஆன்மிக மையம் நடத்தி வந்துள்ளார். இவரது  இந்த மையத்துக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பிரேசிலைச் சேர்ந்தவர்களும் வருகை புரிந்து வந்துள்ளனர். 76 வயது ஜவாகோவுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 4 பெண்கள் அந்த மதபோதகர் தங்களுக்கு இழைத்த அநீதிகளைப் பட்டியலிட்டனர். இந்தப் பேட்டி பிரேசிலில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதையடுத்தே இவர் மீதான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த தொலைக்காட்சிப் பேட்டி ஒளிபரப்பானதையடுத்து அந்த மதபோதகர் மீது 200-க்கும் அதிகமான பாலியல் புகார்கள் குவியத்தொடங்கியுள்ளது.

ஜவாகோ தங்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டில்களில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு ஜவாகோ பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அவர் பிரேசிலில் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதால் அப்போது தங்களால் எதுவும்செய்ய இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இவர் மீது பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பெல்ஜீயம், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்களும் புகார் அளித்துள்ளனர். இது பிரேசில் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேசில்

ஜவோகோவின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெண்கள் கூறுகையில், எங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து வெளியே சொல்ல நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும். அவர் தான் வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்மீது குவிந்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் தரப்பில், நாங்கள் பெண்களை மதிக்கிறோம். இந்த வதந்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. என் மீது குற்றச்சாட்டிய பெண்களை இதுவரை தான் சந்தித்தே இல்லை என ஜவாகோ கூறினார்.

சிறை

புகார்கள் குவியத் தொடங்கியது அடுத்து இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டது. இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஜவோகோ ஏராளமான பணத்தை எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஜவோகோ நாட்டை விட்டு தப்பிச்செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறை அதிகாரிகள், ஜவோகா மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.