வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (18/12/2018)

கடைசி தொடர்பு:16:49 (18/12/2018)

`தேவையில்லாத தலையீடு; அனுமதிக்கவே மாட்டோம்!’ - அமெரிக்க செனட் சபையை எச்சரிக்கும் சவுதி # JamalKhashoggi

ஜமால் கஷோகிஜி படுகொலை செய்யப்பட்டு ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்றுவரை அவரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்படவில்லை. 

ஜமால்
 

துருக்கி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஏமன் போரில் சவுதிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளும் என அமெரிக்க செனட் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. 

சவுதியில் இருந்து அமெரிக்க குடிபெயர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமான சவுதி அதிகாரிகள் எனத் துருக்கி ஆதாரங்களுடன் நிரூபித்தது. உலக நாடுகள் கொடுத்த நெருக்கடியால் ஜமால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட சவுதி, அதன் பிறகு முறையாக விசாரணையை மேற்கொள்ளவில்லை. கொலையின் முக்கிய குற்றவாளிகள் யார் யார் என்பதைக்கூட வெளியிடவில்லை. ஜமால் விவகாரத்தைப் பொறுத்தவரையில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக்கூட அமெரிக்க மேற்கொள்ளவில்லை என ஜமாலின் பத்திரிகை நண்பர்கள் குற்றம்சாட்டுகின்றனர். `ஜமால் அமெரிக்காவின் குடிமகனாகத்தான் இறந்தார். ஆனால், அவரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை ட்ரம்ப் அரசுக்கு இல்லை’ என்று ஜமாலின் குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.

ட்ரம்ப்
 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜமால் விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை முன்னரே தெரிவித்துவிட்டார். `ஜமால் படுகொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அந்தச் சம்பவம் பற்றி முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. எது எப்படியோ சவுதி உடனான நட்புறவை அமெரிக்கா துண்டிக்காது. சவுதியுடன் இணைந்து இரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் போர் நடவடிக்கை முக்கியமானதாகக் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முகமது பின் சல்மான்
 

ட்ரம்பின் இந்த ஸ்டேட்மென்ட் அமெரிக்காவில் புயலைக் கிளப்பியது. அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும். செனட் சபையின் உறுப்பினர்களும் அதிருப்தி தெரிவித்தனர். ஏற்கெனவே ஏமன் மீது சவுதி கூட்டுப்படை நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்க உதவுவதை அந்நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் விரும்பவில்லை. எனவே சவுதி - அமெரிக்கா உறவினை துண்டித்துவிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர், அதன் முதல்படியாக கடந்த வாரம் அமெரிக்க செனட் சபையில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. `ஏமன் போரில் சவுதிக்குக் கொடுத்துவரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் ஜமால் மரணத்துக்கு சவுதி இளவரசர்தான் காரணம்’ உள்ளிட்ட இரண்டு முக்கிய தீர்மானங்களை செனட் சபை நிறைவேற்றியது. ட்ரம்ப் சவுதியைக் கண்டிக்காமல் இருப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.   

அமெரிக்க செனட் சபையின் தீர்மானத்துக்குச் சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுதி வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `அமெரிக்க செனட் சபையின் தீர்மானத்தைக் கண்டிக்கிறோம். செனட் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. சவுதி அரசின் உள்நாட்டுச் செயல்பாடுகளிலும், வெளியுறவு செயல்பாடுகளிலும் செனட் சபை தேவையில்லாமல் தலையிடுகிறது. முறையற்ற இந்தக் குறுக்கீடுகளை சவுதி ஒருபோதும் அனுமதிக்காது’ என எச்சரித்துள்ளது. 

ஜஸ்டின்

 

ட்ரம்ப் செனட் சபையின் தீர்மானம் பற்றி இன்னும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையே ஜமால் படுகொலை, உலக நாடுகள் மத்தியில் சவுதியின் மதிப்பைக் குறைத்துவிட்டது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் `ஜமால் கொலை குறித்து சவுதி கொடுத்த விளக்கத்தில் தெளிவில்லை. ஜமால் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும்வரை ஜெர்மனி, சவுதிக்கு ஆயுதம் விற்பனை செய்யாது’ என்று அதிரடியாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சவுதி உடன் போடப்பட்டுள்ள மல்டிபில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார். உலக நாடுகள் ஏமன் விவகாரத்திலும் ஜமால் விவகாரத்திலும் சவுதிக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்து வருகின்றன. எதற்குமே சவுதி பிடிகொடுக்கவில்லை. தன் நிலைப்பாட்டில் இருந்து மாறவுமில்லை. 

ஜமால் கஷோகிஜி பற்றிய விரிவான செய்திக்கு இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் ; சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க