வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (19/12/2018)

மரணத்தை நெருங்கும் 2 வயது சிறுவன்! - ட்ரம்ப் உத்தரவால் பரிதவித்த தாயின் பாசப் போராட்டம்

ஏமன் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஷாய்மா ஸ்விலே( Shaima Swileh) என்ற 21 வயது பெண் தற்போது எகிப்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த அலி ஹாசன் என்பவரை ஏமனில் சந்தித்து கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இந்தத் தம்பதி எகிப்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்களுக்கு அப்துல்லா என்ற குழந்தையும் பிறந்துள்ளது. 

குழந்தை அப்துல்லா

Photo : Twitter/@CAIRSacramento

ஆனால், அந்தக் குழந்தை பிறக்கும்போதே ஹைபோமைலிநேசன் ( hypomyelination) என்ற மூளை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் எகிப்தில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தும் அவனுக்கு உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பிறகு குழந்தையை அமெரிக்கா கொண்டு சென்று சிகிக்சையளிக்க முடிவு செய்தனர். சரியாக அந்த நேரத்தில் அதாவது ஜனவரி 2017-ம் ஆண்டு, குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்தார். அந்த இஸ்லாமிய நாடுகளில் ஏமனும் ஒன்று. 

ஷாய்மா எகிப்தில் வாழ்ந்து வந்தாலும் அவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு அமெரிக்கா செல்லும் விசா மறுக்கப்பட்டது. தன் குழந்தையின் உடல்நிலை குறித்து அனைத்துத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்தும் அங்குள்ள அதிகாரிகள் ஷாய்மாவுக்கு அமெரிக்க விசா வழங்க மறுத்துவிட்டனர். இதற்குள் குழந்தை அப்துல்லாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் தந்தை அலி ஹாசனும் குழந்தை அப்துல்லாவும் மட்டும் தனியாக அமெரிக்கா சென்றுள்ளனர். 

அப்துல்லா

பிறகு அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்துல்லாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாள்கள் சிகிச்சையளித்தும் குழந்தையின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எகிப்தில் உள்ள தாய் ஷாய்மா பலமுறை முயன்றும் அவருக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அப்துல்லா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் உடல்நிலை பற்றிய ஒரு கடிதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னும் ஷாய்மா அமெரிக்கா செல்லமுடியாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. 

இறுதியாகக் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் என்ற அமைப்பின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் அதே அக்டோபர் மாதம் ஹாய்மாவுக்கு மீண்டும் நேர்காணல் வைத்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் மூன்று மாதங்கள் கழித்து தற்போது அவருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அப்துல்லா

``தற்போது என் மகன் அப்துல்லாவுக்கு அவனது தாய் தேவை. என் மனைவி தினமும் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனை முத்தமிட வேண்டும் அவனை கைகளில் தாங்க வேண்டும் எனக் கெஞ்சுகிறாள். நான் அமெரிக்க அரசைக் கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என் மனைவியை அமெரிக்கா வர அனுமதியுங்கள். என் மகனின் நேரம் கொஞ்ச கொஞ்சமாக முடிந்துகொண்டிருக்கிறது. இப்போதாவது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்து இருக்க விடுங்கள்” எனக் குழந்தையின் தந்தை அலி ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

தற்போது குழந்தை அப்துல்லா மரணத்தை நெருங்கும் தறுவாயில் உள்ளான். ஷாய்மா அமெரிக்க சென்றாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாது. தற்போது தாய் ஷாய்மா அமெரிக்க சென்று தன் குழந்தையை மரணத்தை நோக்கி வழியனுப்பிவைக்கவுள்ளார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.