உழைப்பால் கிடைத்த வெற்றி! - ஃபேஸ்புக் தலைமைப் பதவியில் இந்திய வம்சாவளி அதிகாரி | Facebook elevates Indian-origin executive to head Workplace

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (19/12/2018)

கடைசி தொடர்பு:15:15 (19/12/2018)

உழைப்பால் கிடைத்த வெற்றி! - ஃபேஸ்புக் தலைமைப் பதவியில் இந்திய வம்சாவளி அதிகாரி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில், இந்திய வம்சாவளி அதிகாரி ஒருவர் தலைமைப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

ஃபேஸ்புக்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் வொர்க்பிளேஸ் (Workplace). லண்டனில் செயல்படும் இந்த நிறுவனம், தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான தகவல் தொடர்பு கருவியாகச் செயல்படுகிறது. 

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியில் கரன்தீப் ஆனந்த் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கரன்தீப், இதுநாள் வரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவாகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 15 ஆண்டுக்காலம் பணியாற்றிய கரன்தீப், கடந்த 4 ஆண்டுக்காலத்துக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 

தற்போது, வொர்க்பிளேஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள கரன்தீப், இனிமேல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜூலியன் கடோரினியுடன் இணைந்து பணியாற்றுவார். 

வொர்க்பிளேஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் பணியாற்றும் டெவலப்பர்கள், இன்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட்டுகள் உள்ளிட்டவர்களை கரன்தீப் கையாள்வார் என ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

``கரன்தீப், வொர்க்பிளேஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வர இருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 
அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அவரது நீண்ட கால அனுபவம் மற்றும் நிறுவன பின்புலம்தான் அவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது’’ என்று அவர் மேலும் கூறினார். 

இதனிடையே வொர்க்பிளேஸ் நிறுவனத்தில் பணியாற்ற இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து தனது லிங்டுஇன் தளத்தில் எழுதியுள்ள கரன், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களிடையே வொர்க்பிளேஸைக் கொண்டு செல்ல இருப்பது உண்மையிலேயே தமக்குப் பரவசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

கரன்தீப்

வொர்க்பிளேஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குழுக்களை உலகம் முழுவதும் சுமார் 3,29,000 நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலையில், ஸ்லாக் நிறுவனத்தை 5 லட்சம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதே சமயம் வொர்க்பிளேஸ் நிறுவனத்தை சுமார் 30,000 நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரித்து நிறுவனத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே கரன்தீப்பை ஃபேஸ்புக் நிறுவனம் இப்பதவியில் அமர்த்தியுள்ளதாகத் தெரிகிறது. 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க