வெளியிடப்பட்ட நேரம்: 22:43 (19/12/2018)

கடைசி தொடர்பு:22:57 (19/12/2018)

`இசையை இப்படியும் உணரலாம்!’ - மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவிய மகள் #ViralVideo

கனடாவில் இசைநிகழ்ச்சி ஒன்றில் கேட்கும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு, அவரின் மகள் பாடல் வரிகளை சைகை காட்டி உணர்த்தும்  வீடியோ காண்போரை நெகிழச்செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

மகள்

குறைபாடுகள் உடலுக்கு மட்டும்தானே தவிர, அன்புக்கு அல்ல. அன்பின் வழியே உணர்வுகளைக் கடத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர். ஆம்! அது ஓர் இசை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு தன் தந்தையை அழைத்துச் சென்றுள்ளார் அவரின் மகள் கேர்ரி கார்பெரி. கேட்கும் திறனை இழந்த தனது தந்தைக்கு, அந்த இசை நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் பாடலைக் கேட்க முடியவில்லை. தவிர, குழுமியிருந்தவர்கள் இசையைக் கேட்டு நடனமாட அவர் மட்டும் தவித்துக்கொண்டிருந்தார். தன் தந்தையை இந்தநிலையில் பார்க்க முடியாத கேர்ரி, சைகை மூலமாகத் தன் தந்தைக்குப் பாடல் வரிகளை உணர்த்துகிறார். அதைக்கேட்டு அவரின் தந்தை நடனமாடுகிறார். இந்த வீடியோவை ஜூல்ஸ் மரியா என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தந்தை

இது தொடர்பாக அவர், ``இரவு இசை நிகழ்ச்சியில் ஓர் அற்புதமான காட்சியைப் பார்த்தேன். அந்தக் காட்சி இன்னும் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏராளமானோர் இசைநிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அவரின் தந்தையை நோக்கி சைகைகாட்டிக்கொண்டிருந்தாள். தொடக்கத்தில் அது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பின் ஏதோ ஒன்று வழக்கத்து மாறாக நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்டோம். கேட்கும் திறன் குறைபாடு கொண்ட தந்தைக்கு சைகை மூலம் பாடல் வரிகளை அந்தப் பெண் உணர்த்திக்கொண்டிருப்பதை, அறிந்தபிறகு நெகிழ்ந்தோம். மேடையில் நடந்த நிகழ்ச்சிகளை நாங்கள் கண்டுகொள்ளவேயில்லை. எங்கள் கவனம் முழவதும் அவர்கள் மீதே இருந்தது. அவர் இது போன்ற ஒரு பெண்ணை மகளாகப் பெற்றதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை 20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமன்றி 3 லட்சம் ஷேர் செய்துள்ளனர். இது தொடர்பாகக் கமென்ட் செய்துள்ளவர்கள், `இது எனக்கு அழுகையை வரவழைக்கிறது', `தந்தைக்கும் மகளுக்குமான பந்தம் இதுதான்' என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளனர்.