வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:41 (20/12/2018)

` பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியா?’ - கொந்தளித்த இலங்கை அதிபர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பதவிபிரமாணம் செய்து வைக்கும் அதிபர் சிறிசேனா

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று புதிதாகப் பதவியேற்றுக்கொண்டனர். 

அந்நாட்டில் 50 நாள்களுக்கும் மேலாக நீடித்துவந்த அரசியல் குழப்பநிலை, கடந்த வார இறுதியில் முடிவுக்கு வந்தது. கடந்த 16-ம் தேதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதமர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து ரணிலின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து ரணிலுக்கும் மைத்திரிக்கும் கருத்துமாறுபாடு ஏற்பட்டது. 

 மங்கள சமரவீராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த சிறிசேனா

மைத்திரியைப் பொறுத்தவரை, அண்மையில் அவரின் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மூன்று பேருக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அமைச்சராக ரவூப் ஹக்கீம்

மேலும் அவரை பைத்தியம் பிடித்த ஜனாதிபதி, மனநோயாளியான அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடுமையாகக் குறிப்பிட்டுப் பேசிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சர் பதவி கிடையாது என ரணில் தரப்பிடம் கூறிவிட்டார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர, நிதி மற்றும் ஊடகத்துறையை மைத்திரியே எடுத்துக்கொள்வார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரிடம் அந்தத் துறைகளை விட்டுத் தர முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி-க்கள் வெளிப்படையாகவே பேசினர். இந்த நிலையில், 35 பேர் அடங்கிய உத்தேச அமைச்சர்கள் பட்டியலை ரணில் தரப்பிலிருந்து மைத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று பதவியேற்பு நடக்கும் என நேற்று இரவு மைத்திரியும் தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்தில் பதவியேற்பு விழா நடந்தது. ரணில் உட்பட 29 அமைச்சர்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அமைச்சராக மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தேசியக் கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பதவியானது, மங்கள சமரவீரவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இவருடன் இப்பதவிக்குப் போட்டியில் இருந்த ரவி கருணநாயக்கவுக்கு எரிசக்தித்துறை வழங்கப்பட்டுள்ளது. 

அமைச்சராக  சஜித் பிரேமதாச

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ரிசாத் பத்யுதீனுக்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சராக சந்திராணி பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகனுமான சஜித் பிரேமதாசாவுக்கு மீண்டும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. இதைப் போலவே, இலங்கை கிரிக்கெட் குழுவின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை துறை தரப்பட்டுள்ளது. 

இந்திய வம்சாவளித் தமிழர் கட்சித் தலைவர்களில், பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசன், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராக  தலதா அத்துகோரல

சந்திராணி பண்டார, தலதா அத்துகோரல ஆகிய இரண்டு பெண் அமைச்சர்களும் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.  

சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றை அதிபர் மைத்திரியே வைத்துக்கொண்டுள்ளார்.