வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (23/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (23/12/2018)

‘என்னை பிரதமர் ஆக்கலனா குதிச்சுருவேன்’ - மிரட்டிய நபர்; அசத்திய பாகிஸ்தான் காவல்துறை

ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று தன்னை பிரதமராக்குமாறு கோரிக்கை விடுத்த சுவாரஸ்ய சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

செல்போன் கோபுரம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ப்ளூ ஏரியாவில் பெயர் தெரியாத ஒருவர் நேற்று பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார். கோபுரத்தின் உச்சிக்கு சென்றதும் அங்கிருந்து ‘ என்னை பாகிஸ்தானின்  பிரதமராக்குங்கள் நான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் வெறும் ஆறுமாதத்துக்குள் நாட்டின் மீது உள்ள கடனை சரி செய்வேன். என்னை பிரதமராக்கவில்லை என்றால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டியதாக ஜியோ என்ற பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோபுரம் மீது ஏறியவர்

இதை அறிந்த இஸ்லாமாபாத் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, கோபுரத்தில் நின்றவரைக்  கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு மேலே நின்ற அவர் தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேச வேண்டும் அல்லது இஸ்லாமாபாத் காவல்துறை உயர் அதிகாரியிடம் பேச வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நேரமாக செய்வதறியாது போலீஸார் திண்டாடியுள்ளனர்.

இன்ரான் கான்

பிறகு பாகிஸ்தானில் மிமிக்ரிக்கு புகழ்பெற்ற காமெடி நடிகர் ஷஃபாத் அலி என்பவரை தொடர்பு கொண்ட உள்ளூர் போலீஸார் இந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கியுள்ளனர். பிறகு ஷஃபாத் அலி, பிரதமர் இம்ரான்கான் போல் மிமிக்ரி செய்து கோபுரத்தில் நின்றவரிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். செல்போனில் பிரதமரின் குரலைக் கேட்டு திருப்தியடைந்த அந்த நபர் பிறகு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

ஷஃபாத் அலி

பிறகு அந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் சாதூர்யமாக யோசித்து செயல்பட்ட இஸ்லாமாபாத் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.