வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (23/12/2018)

கடைசி தொடர்பு:11:46 (23/12/2018)

‘முடியை வெட்டு; இல்லையேல் வெளியேறு’ - நடுவரால் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட பாக்ஸர்

அமெரிக்காவில் 17 வயது மல்யுத்த வீரர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் ஆலன் மலோனி என்ற  நடுவருக்கு  சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக் ஃபிரான்கிள் என்ற ஊடகவியலாளர்  தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு விளையாட்டு அரங்கில் ஒரு மாணவருக்கு, பெண் ஒருவர் தலைமுடியை வெட்டி விடுகிறார். இது தற்போது உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.  

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் கடந்த வியாழன் அன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையே மல்யுத்த போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த ஆண்ட்ரூ ஜான்சன் என்ற 17 மாணவன் அதிக முடி வளர்ந்திருந்ததால் அவனை  ‘ஒன்று முடியை வெட்டு இல்லை ஆட்டத்தை விட்டு வெளியேறு’ என அந்த ஆட்டத்தின் நடுவர் ஆலன் மலோனி வற்புறுத்தியுள்ளார். அந்த மாணவன் வேறு வழி இல்லாமல் தன் தலை முடியை வெட்டிக்கொண்டு விளையாடச் செல்கிறான். போட்டியின் முடிவில் மாணவன் ஜான்சன் வெற்றி பெற்று விடுகிறார். அவனது வெற்றியை வேண்டா வெறுப்பாக கைதூக்கி அறிவிக்கிறார் அந்த நடுவர். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

நடுவர் ஆலனின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. இதில்  ‘அந்த மாணவன் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால்தான் நடுவர் இவ்வளவு தொந்தரவு செய்துள்ளார்’ என்றும் ‘ விளையாட்டு விதிகளின் படி அதிகமாக முடி வைத்திருக்கக் கூடாது ஆனால் மாணவன் ஆண்ட்ரூ ஜான்சன் அவ்வளவு முடி வைத்திருக்கவில்லை’  'இது கொடூரமான இனவெறி’  எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவன் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நியூ ஜெர்ஸி சமூக உரிமைகள் அமைப்பு அந்த நடுவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. நடுவர் ஆலன் இப்படி நடந்துகொள்வது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னதாக ஒரு போட்டியில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நடுவரை நீக்ரோ என அழைத்துள்ளார். இதனால் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.