நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வங்கதேசக் கேப்டன்! - மக்கள் வெள்ளத்தில் பரப்புரை | Mortaza begins campaigning for bangladesh general elections

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (23/12/2018)

கடைசி தொடர்பு:07:22 (24/12/2018)

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வங்கதேசக் கேப்டன்! - மக்கள் வெள்ளத்தில் பரப்புரை

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மஷ்ரஃபி மொர்டசா, தனது சொந்தத் தொகுதியில் பரப்புரையைத் தொடங்கினார். 

மொர்டசா

350 இடங்கள் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்துக்கு வரும் 30-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களம் காண்கிறது. அவாமி லீக் தலைமையிலான கூட்டணிக்கு வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைமையிலான ஜதியா ஓய்க்யா முன்னணி கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவாமி லீக் கட்சி சார்பில், தனது சொந்தத் தொகுதியான நரெய்ல்-2 தொகுதியில் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டன் மொர்டசா போட்டியிடுகிறார். தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் மொர்டசாவின் முடிவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. `அரசியலில் களம் காண்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மொர்டசா, அரசியலில் ஈடுபடுவது அவரது உரிமை. அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை’ என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

மொர்டசா பரப்புரை

இந்த நிலையில், தேர்தல் பரப்புரையை மொர்டசா தொடங்கினார். திறந்த காரில் இருந்தபடியே பரப்புரையைத் தொடங்கிய மொர்டசாவுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மக்களிடையே பரப்புரை செய்த அவர், அவாமி லீக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். அவரைக் காண அந்தத் தொகுதி மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளத்தில் பரப்புரை செய்த அவர், வரும் தேர்தலில் அவாமி லீக் கட்சியைப் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார். அரசியலில் களமிறங்குவது குறித்து பேசிய மொர்டசா, ``நாட்டின் வளர்ச்சி என்ற கருத்தை ஆழமாக நம்புவன் நான். அதேநேரம் அரசியல் இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன். தற்போது மக்களுக்கு சேவைபுரிய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது’’என்று கூறியிருக்கிறார்.