வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:11:00 (25/12/2018)

‘அழையா விருந்தாளியாக வந்த அலை’ - சுனாமி தாக்கிய திகில் நிமிடங்களைப் பகிர்ந்த பெண்

இந்தோனேசியாவின் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகடோவா என்ற எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  வெடித்துச் சிதறியது. இதனால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக செராங் மற்றும் சவுத் லம்பாங் ஆகிய பகுதிகளைச் சுனாமி தாக்கியது. 

இந்தப் பெரும் விபத்தினால், இதுவரை 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுனாமி தாக்கக்கூடும் என எந்த முன்னறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை எனப் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டியுள்ள  3000 வீடுகள் சுனாமி அலையில் அடித்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜாவா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து மீட்புப் பணிகளைச் செய்துவருகின்றனர். 

மேலும், பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முடியாமலும், கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியில் வர முடியாமலும் தவித்துவருகின்றனர். மீண்டும் ஒரு சுனாமி தாக்க வாய்புள்ளதாக இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

சுனாமி தாக்கிய திகில் நிமிடங்கள் குறித்துப் பேசிய யுனி என்ற பெண், “  இரவு நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியில் பலத்த சத்தம் கேட்டது. வெறும் காற்று என நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில், சத்தம் மிக அருகில் கேட்டது. உடனடியாகச் சென்று நான் கதவைத் திறந்தேன். நான் கதவைத் திறக்கவும் தண்ணீர் என் வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது. அழையா விருந்தாளியாகப் பாய்ந்து வந்த நீர், என்னை அடித்துச்சென்றுவிட்டது. பிறகு, அங்கிருந்து மிகவும் சிரமப்பட்டு தப்பி  வந்தேன்” என்றார்.