இப்படியும் ஒரு சவுதி தொழிலதிபர்! - நெகிழ்ந்த இந்திய இளைஞரின் குடும்பம் | Saudi businessman clears dues of Indian employee

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (28/12/2018)

கடைசி தொடர்பு:10:27 (30/12/2018)

இப்படியும் ஒரு சவுதி தொழிலதிபர்! - நெகிழ்ந்த இந்திய இளைஞரின் குடும்பம்

வுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார். தந்தை நிறுவனத்தை நடத்தி வந்தபோது அவரிடத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சவுதி தொழிலதிபர்

குடும்பச் சூழல் காரணமாக இந்திய இளைஞர் அவசரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. அப்போது, மிஸ்பர் அல் சமாரியின் தந்தை 6,000 ரியால் (ரூ.1,12,000) இந்திய இளைஞருக்குச் சம்பள பாக்கி  வைத்திருந்தார். நிறுவனத்தின் நிதிநிலை காரணமாக அந்த இளைஞர் இந்தியா திரும்பியபோது மிஸ்பர் அல் சமாரியின் தந்தையால் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க முடியவில்லை. இந்திய இளைஞரிடம், 'உங்கள் பணம் எந்தச் சமயத்திலும் உங்களிடம் வந்து சேரும் கலங்க வேண்டாம் ' என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். கடன் பட்டார் நெஞ்சம் போல சவுதி தொழிலதிபரின் மனம் இந்திய இளைஞருக்குச் சம்பள பாக்கியை வழங்கத் துடித்துக்கொண்டிருந்தது. 

இந்திய இளைஞரின் சம்பள பாக்கியை வழங்கிய சவுதி தொழிலதிபர்

இந்தியா திரும்பிய  இளைஞரைத் துரதிர்ஷ்டமும் பின்னாலேயே துரத்தி வந்தது. ஆம்.. சில நாள்களில் அந்த இளைஞர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்தத் தகவல் சவுதி தொழிலதிபருக்குத் தெரியவந்ததும் மனமுடைந்து போனார். உடனடியாக, தன் மகனை அழைத்து இளைஞருக்கு தான் வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை எப்படியாவது கொடுத்து விடுமாறு கூறினார். தொடர்ந்து, மகன் மிஸ்பர் அல் சமாரி சவுதி தூதரகம் வழியாக இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு இறந்துபோன இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்தார். பின்னர், 6000 ரியாலுக்கான செக்குடன் இந்தியா வந்த அல் சமாரி இளைஞரின் குடும்பத்தினரிடம் செக்கை வழங்கினார். இளைஞரின் குடும்பத்தினருக்கு செக் வழங்கியதைத் தந்தைக்கு காட்டுவதற்காக வீடியோவாகவும் எடுத்தார். ஆனால், மகன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றியதைக் காண மிஸ்பர் அல் சமாரியின் தந்தை உயிருடன் இல்லை. மிஸ்பர் அல் சமாரி சவுதி திரும்புவதற்கு முன் வயது முதிர்வு காரணமாக அவரின் தந்தையும் இறந்தும் போனார். 

சவுதியில் வேலைக்காக அழைத்துப் போய் ஏமாற்றப்படுவதையும் சம்பளப் பாக்கியைப் பெற நடையாய் அலைபவர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சம்பளப் பாக்கியை வீடு  தேடி சென்று  வழங்கிய சவுதி தொழிலதிபரின் செயல் வியக்க வைத்துள்ளது. 

source : on manorama

நீங்க எப்படி பீல் பண்றீங்க