வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (29/12/2018)

கடைசி தொடர்பு:09:43 (29/12/2018)

`20 வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் சிரித்திருப்பேன்.. ஆனால்!’ - அதிபர் தேர்தல் குறித்து ஏஞ்சலினா ஜோலி சூசகம்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருப்பதாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கூறியிருக்கிறார். 

ஏஞ்சலினா ஜோலி

துணிச்சலுக்கும் மனிதாபிமானத்துக்கும் பெயர் பெற்றவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இளம் வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, போதை பழக்கத்திலிருந்து மீண்டது, கர்பப்பை நீக்கியதை அறிவித்தது என தன் பெர்சனல் குறித்தும் வெளிப்படையாக அறிவித்தவர் ஜோலி. ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான தூதரகப் பணியாற்றி வரும் அவர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பசியால் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். அகதிகளின் குழந்தைகளுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஏஞ்சலினா, அதற்காகப் பல்வேறு உலக நாடுகளின் மூலம் உதவிகளும் செய்துவருகிறார். 

ஏஞ்சலினா ஜோலி

அவர் பிபிசி வானொலியில் அளித்த பேட்டி தற்போது அமெரிக்க அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பிபிசி-யின் டுடே ப்ரோக்ராம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏஞ்சலினாவிடம் அரசியல் ஈடுபடும் ஆர்வம் இருக்கிறதா என தொகுப்பாளர் ஜஸ்டின் வெப் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஏஞ்சலினா, `இந்தக் கேள்வியைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பியிருந்தால் நான் நிச்சயமாக சிரித்திருப்பேன். நமக்கான தேவை எங்கிருக்கிறதோ, அங்கு நாம் செல்ல வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு. அரசியலுக்கு நான் ஒத்து வருவேனா என்று தெரியவில்லை. 

ஏஞ்சலினா ஜோலி

அரசாங்கம் மற்றும் ராணுவம் ஆகியவற்றுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியும் என்றால், அதைவிட பெரிய காரியங்களைச் சாதிக்கும் ஒரு இடத்தில் நான் அமர்வேன்’’ என்றவர், `தற்போதைக்கு அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்றும் கூறினார்.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பில் நிறுத்தப்படும் 30 அல்லது அதிபர் வேட்பாளர்களில் உங்கள் பெயரையும் சேர்க்கலாமா என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, `நன்றி’ என்றதோடு முடித்துக்கொண்டார்.