வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (29/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (29/12/2018)

நீல நிறத்தில் ஒளிர்ந்த வானம்... உலகம் அழியப்போகிறது என்று நினைத்த நியூயார்க் மக்கள்

நியூயார்க் நகரில் அடர்கறுப்பு நிறத்தில் இருந்த வானம் திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்ததால் உலகம் அழியப்போகிறது என அங்கிருந்த மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். சிலர் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டு பூமிக்குள் நுழைகிறது என்றும் அச்சப்பட்டனர். உண்மையில் நடந்தது என்ன?

நீல வானம்

நியூயார்க் நகரத்தின் அஸ்டோரியா பகுதியில் கடந்த வியாழன் இரவு மின்தடை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திடீரென வானம் நீல நிறத்தில் ஒளிர்ந்தது. பச்சையும் நீலமும் கலந்த ஒளிர்ந்த இந்த வானத்தைக் கண்டுதான் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். பலர் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். சிலர் காவல்துறைக்கும் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் விமானசேவையும் பாதித்தது. சில ரயில்களும் தாமதமானது.

இதை விசாரித்த நியூயார்க் காவல்துறை, அப்பகுதியில் இருக்கும் `கான்எடிசன்' துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால்தான் இந்த நீல நிறம் உருவானது என்றும் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை வேற்றுக்கிரகவாசிகளின் வேலை என்று நினைத்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக ``கான்எடிசன்” நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட ரயில்சேவையும், விமான சேவையும் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பின.

நீல நிறம் எப்படி?

இயல்பாகத் தீவிபத்து ஏற்பட்டால் மஞ்சள் நிறமோ அல்லது சிவப்பு நிறமோ ஏற்படுவது வழக்கம். ஆனால், இங்கு நீல நிறம் ஏற்பட்டதற்கான அந்த துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரிலிருந்த வேதிப்பொருள்கள் மற்றும் உலோகங்களும் எரிந்ததுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.