வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:07:09 (04/01/2019)

M, F அல்லது X! நியூயார்க் நகரில் நடைமுறைக்கு வந்தது பாலின நடுமை பிறப்புச்சான்றிதழ்!

 

நியூயார்க்

``நியூயார்க்கில் வாழும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கும், பாலினச் சார்பற்றவர்களுக்கும் :

நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். உங்கள் குரல்களை நாங்கள் கேட்கிறோம். உங்களை நாங்கள் மதிக்கிறோம். 2019-ம் ஆண்டுமுதல், நியூயார்க்கில் வாழும் அனைத்து மக்களும், மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் தங்களுடைய பிறப்புச் சான்றிதழில் M, F அல்லது X என்று தங்களுடைய பாலினத்தை மாற்றிக்கொள்ளமுடியும்” நியூயார்க் மாகாணத்தின் மேயர் அலுவலகம் கடந்த புத்தாண்டு அன்று வெளியிட்ட ட்வீட் இது.

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி, கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் பாலின நடுமை (gender neutral) பிறப்புச்சான்றிதழ்கள் நடைமுறையில் உள்ளன. இதைப்போலவே, தற்பொழுது நியூயார்க்கிலும் பாலின நடுமை பிறப்புச்சான்றிதழ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பதினெட்டு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் பிறப்புச் சான்றிதழில் இந்தப் பாலின மாற்றத்தைக் குறிப்பிடலாம். பதினெட்டு வயதுக்கு மேலுள்ள அனைவரும், மருத்துவச் சான்றிதழ் இல்லாமல், சுய அத்தாட்சியை மட்டும் இணைத்துத் தங்களுடைய பாலினத்தைப் பதிவு செய்யலாம்.

பிறப்புச் சான்றிதழில் மட்டுமே உள்ள இந்த நடைமுறை, ஏழு மாகாணங்களில் ஓட்டுநர் உரிமத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலினச் சமத்துவம் குறித்த உரையாடல்களும், சட்ட திட்டங்களும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் எடுக்கப்பட்டுவரும் இம்முயற்சி சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் நல் ஆதரவைப் பெற்றுள்ளது. கூடிய விரைவில் இந்த நடைமுறை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து அலுவல் ரீதியான கோப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்று நம்புவோம்!