வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (04/01/2019)

கடைசி தொடர்பு:20:58 (04/01/2019)

உலகின் வயதான நபர் ஜீன் கால்மென்ட் இல்லை - மோசடி செய்தது அம்பலம்!

லகின் வயதான நபர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் என இதுவரை நம்பப்பட்டு வந்தவர்,  ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  பெண். ஆனால், இவர் மோசடி செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. ஜீன் கால்மென்ட் 99 வயதிலேயே உயிரிழந்துவிட, அவரது மகள் யோவோன்தான் தாயின் பெயரில் வாழ்ந்து வந்திருக்கிறார் என்கிற உண்மையும் அம்பலமாகியுள்ளது.

மோசடி

1997-ம் ஆண்டு உயிரிழந்த ஜீன் கால்மென்ட், 122 ஆண்டுகள் 164 நாள்கள் உயிர் வாழ்ந்துள்ளார் என்றும், உலகிலேயே அதிக வயதான நபர் என்றும்  கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார். இதுவரை இந்தச் சாதனை  முறியடிக்கப்படாமலே இருக்கிறது. ஆனால், இந்தச் சாதனையை ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஷ்யாவைச் சேர்ந்த கணிதவியல் நிபுணர் நிகோலாய் ஸாக் மற்றும் வயது முதிர்வுகுறித்த ஆராய்ச்சியாளர் வாலரி நோவோசெலோவ் ஆகிய இருவரும் இந்தப் பெண் பற்றிய விவரங்களை எல்லாம் சேகரிக்கத் தொடங்கினர்.

ஜீன் காமென்ட்

ஜீன் கால்மென்ட் கொடுத்த பேட்டிகள், வெளியான புகைப்படங்கள், வயதுகுறித்து அவர் தெரிவித்த விவரங்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னர், அவர்கள் ஒரு முடிவுக்குவந்தனர். அதாவது, 122 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஜீன் கால்மென்ட், 1934-ம் ஆண்டு, 99 வயதிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது மகள் யோவோன், வாரிசுரிமை வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, நுரையீரல் பாதிப்பால் தானே உயிரிழந்துவிட்டதாக வெளி உலகை நம்பவைத்துள்ளார். மேலும், தாய் ஜீன் கால்மென்ட்டின் அடையாளத்துடனே வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியபோது, " அடையாள அட்டையில் ஜீன் கால்மென்ட்டின் கண் அடர் நிறத்தில் காணப்பட்டது என்றும், அவரது உயரம் 152 செ.மீ, முன் நெற்றி சற்று தாழ்ந்ததுபோல் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடையாள அட்டையில் தெரிவிக்கப்பட்டிருந்த அங்க அடையாளங்கள், பின்னாளில் மாறுபட்டுள்ளன.

உலகின் பிற அதிக வயதானவர்களுக்கு இருந்த தசைத் தளர்வு இவருக்கு ஏற்படவில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் உட்கார முடிந்திருக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதிநோய்க்கான அறிகுறிகளும் தென்படவில்லை" என்று தெரிவித்துள்ளனர். மோசடி செய்ததாகக் கூறப்பட்ட பெண், இறந்து 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

அதற்கு முன்னதாக, காப்பீட்டு விசாரணை அதிகாரி ஒருவர் ஜீன் கால்மென்ட் எடுத்த காப்பீட்டை ஆய்வுசெய்தபோது, மகளே தாயின் பெயரில் வாழ்ந்துவருகிறார் என்றும், ஆள் மாறாட்ட மோசடி நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்ததாக, 1997-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.