வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (08/01/2019)

கடைசி தொடர்பு:15:19 (08/01/2019)

12,000 அடி உயரத்தில் ராணுவ பீரங்கி! - உலக சாதனைப் படைத்ததாக பாகிஸ்தான் பெருமிதம்

மிக மிக உயரமான மலை உச்சியில் ராணுவ பீரங்கியை (Operational Tank) நிறுத்தி பாகிஸ்தான் ராணுவம் உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ஆர்மி
 

சாத்தியமற்ற பணிகளை உறுதியுடன் செய்து முடிப்பதே எங்கள் அடையாளம் என பாகிஸ்தான் ராணுவம் மார்தட்டிக் கொள்வது வழக்கம். இம்முறையும் அப்படியொரு சாத்தியமற்ற விஷயத்தைச் செய்து முடித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு கைபர் பாக்தூன்க்வாவின் என்னும் பழங்குடி மலைப்பகுதி உள்ளது. உலகின்  மிகவும் கடினமான நிலப்பரப்புகளில் ஒன்றான அங்கு, 12,000 அடி உயரத்தில் மலைச் சிகரத்தின் உச்சியில் ராணுவ பீரங்கியை நிலை நிறுத்தியுள்ளது பாகிஸ்தான். அதாவது கடல் மட்டத்துக்கு மேலே 3,176 மீட்டர் உயரத்தில் பீரங்கியைக் கொண்டு சேர்த்துள்ளது.  

பாகிஸ்தான் ராணுவம்
 

ஆப்கானிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் கைபர்  மாவட்டத்துக்குள் நுழைவதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் ராணுவ தளபதி அமிர் தெரிவித்துள்ளார்.  `கரடுமுரடான பகுதிகளைக் கடந்து, 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பீரங்கியை அங்கே கொண்டு சென்று சேர்த்தோம்’ என அமிர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப்பகுதிக்கு நேராக இந்தப் பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவினால் தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்குமாம். மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தலாக இருக்குமெனக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க