`என்கிட்ட துப்பாக்கி இருக்கு!’ - மல்யுத்த வீராங்கனையிடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட திருடனுக்கு நேர்ந்த கதி! | UFC fighter smashes down the thief who asked her mobile phone

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:09:37 (09/01/2019)

`என்கிட்ட துப்பாக்கி இருக்கு!’ - மல்யுத்த வீராங்கனையிடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட திருடனுக்கு நேர்ந்த கதி!

பிரேஸில் நாட்டில் காருக்காகக் காத்திருந்த மல்யுத்த வீராங்கனையுடன் செல்போனைத் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது. 

வியன்னா

பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் போலியனா வியன்னா. 26 வயதான இவர், ஒரு மல்யுத்த மற்றும் தற்காப்புக் கலை வீராங்கனை. உலகப் புகழ்பெற்ற யூ.எஃப்.சி மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று அசத்தும் இவர், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள தனது குடியிருப்புக்கு வெளியே காருக்காகக் காத்திருந்திருக்கிறார். 

மல்யுத்த வீராங்கனை

அப்போது அங்கு வந்த ஒருவர், அவர் அருகில் அமர்ந்து தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகச் சொல்லி, வியன்னாவிடம் இருந்த பொருள்களைத் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக, வியன்னா கொடுத்த அடியைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார் அந்த நபர். இதை யூ.எஃப்.சி தலைவர் தானா வைட் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவுசெய்திருந்தார். 

இதுதொடர்பாக, இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வியன்னா,  ``நான், காருக்காக எனது குடியிருப்புக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒருவர் வந்து எனது அருகில் அமர்ந்து, டைம் என்ன என்று கேட்டார். 

அதிரடி கட்டும் வீராங்கனை

அவருக்குப் பதிலளித்தேன். அதன் பின்னரும் அவர் அங்கிருந்து செல்லவில்லை. சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் கையில் வைத்திருந்த எனது செல்போனை பாதுகாப்பாக உள்ளே வைத்தேன். அப்போது அவர், அந்த செல்போனை கொடுங்கள்... என்னிடம் துப்பாக்கி உள்ளது என எடுத்துக் காண்பித்தார். 

அப்போது நான், அந்தத் துப்பாக்கியைக் கவனித்தேன். அது சாஃப்ட்டாக இருந்தது. உடனடியாக எழுந்த நான், தாமதிக்காமல் அவரைத் தாக்கி கீழே தள்ளினேன். அதன் பின்னர் போலீஸுக்கு தகவல் சொல்ல, அவர்களும் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர்” என்றார்.

வியன்னாவும் திருடனும்

வியன்னாவின் அதிரடியான பன்ச்-களால் அந்தத் திருடனின் முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. காவலர்கள் அவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்தது அட்டைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது. மேலும், அவரைக் காவல் நிலையம் அழைத்துச்செல்லும் முன் மருத்துவமனை அழைத்துச்சென்றனர். 

போலியனா வியன்னா, களத்தில் ஆக்ரோஷமாக மோதக்கூடியவர். அயர்ன் லேடி என்று அழைக்கப்படும் இவர், இது வரை மோதிய 12 ஆட்டங்களில் 10 -ல் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.