வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (09/01/2019)

கடைசி தொடர்பு:18:22 (09/01/2019)

மெக்காவில் தமிழ்ப் புத்தகம்! - போராடி வென்ற பேராசிரியர் ஹாஜா கனி

மெக்கா மதீனாவுக்கு புனிதபயணம் மேற்கொண்டுள்ள பேராசிரியர் ஹாஜா கனி, அங்குள்ள நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களை இடம்பெறச் செய்தது குறித்து விவரிக்கிறார்.

ஹாஜா கனி

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்றான் பாரதி. அதற்கேற்ப உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழின் சிறப்புகள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. உலகத்தில் உள்ள தலைசிறந்த நூலகங்களிலெல்லாம் தமிழ் நூல்களின் இருப்பு இன்றியமையாததாக மாறியுள்ளது. அப்படி தமிழ்நூல்கள் இல்லாத நூல்களைக் கண்ட தமிழர்கள், சம்பந்தபட்ட நூலகங்களில் தமிழ்நூல்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பேராசிரியர் ஹாஜா கனி, மெக்காவில் உள்ள நூலகம் ஒன்றில் தமிழ் நூல்கள் இடம்பெறுவதற்கான புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நூலகம்

இது தொடர்பாக அவரிடம் பேசுகையில், ``புனித மெக்கா நகரத்தின் காபத்துல்லா என்ற இறை ஆலயத்துடைய மிகப் பெரிய நுழைவாயிலான கிங் ஃபஹத் கேட் நுழைவாயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தின் நான்காவது தளத்தில் புகழ்பெற்ற புனித ஹரம் பள்ளிவாசலில் மிகப்பெரிய நூலகம் ஒன்று உள்ளது. அதில் தமிழ் நூல்கள் இடம்பெறாமல் இருந்தன. மெக்கா மதீனாவுக்கு புனித பயணத்தில் உள்ள நான் இதைக்கண்டு, சம்பந்தப்பட்ட நூலகப் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசினேன். அரபி பேசுபவர்களிடம் மொழிபெயர்ப்பாளர்களை வைத்துப் பேசினேன். அதன் பிறகு, ஆங்கிலம் தெரிந்தவர்களிடம், தமிழுக்கும் அரபுக்கும் உள்ள தொடர்புகள், தமிழகத்துக்கும் அரபு நாட்டுக்கும் நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பிருந்தே இருக்கூடிய வணிகத்தொடர்பு, அதற்கு பின் உருவான மார்க்கத்தொடர்பு கொடுத்து விளக்கினேன். இப்படிப்பட்ட மொழியை இடம்பெறாமல் வைத்திருப்பது சரியல்ல எனக் கூறினேன். அவர்கள் என் உணர்வை புரிந்துகொண்டனர். தமிழ் நூல்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இரண்டு அடுக்குகள் ஒதுக்கியுள்ளனர்.

புத்தகம்

மற்ற 62 மொழிகளுக்கான புத்தகங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன. கவிக்கோ மன்றம் ரஹ்மத் பதிப்பகத்தில் பேசி தமிழ் நூல்கள் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆலோசனை வழங்கினார். இப்போது மெக்காவுக்கு தமிழ் நூல்கள் பயணமாகியுள்ளன. தமிழுக்கு அங்கு ஓர் இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் வரும் மக்கள் பயன்படுத்தக்கூடிய நூலகத்தில் தமிழுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டதில் சிறு முயற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல அங்கிருக்கக்கூடிய நூலக வருகையாளர் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட்டேன். அது வாக்குவாதமாக மாறியது. அவர்களுக்குத் தலைமையாக இருக்கக்கூடிய ஜேஃப்ரி என்பவரிடம் உரையாடினேன். இரண்டு மூன்று நாள்கள் தொடர்ந்து சென்று பேசினோம். அவர், `நாங்கள் பர்சேஸ் கமிட்டி அமைக்கவில்லையே' என்றார். அதற்கு நாங்கள், `இறைப்பணிக்காக எங்கள் தமிழ்நூல்களை இலவசமாக அனுப்பி வைக்கிறோம்' என்றதும் அவர் பெரும் மகிழச்சியடைந்தார்'' என்றார்.