'உலகில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்'- விண்வெளியில் விளம்பரப் பலகையை நிறுவும் ரஷ்ய நிறுவனம்! | Russian startup plan to launch Space billboards

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (18/01/2019)

'உலகில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்'- விண்வெளியில் விளம்பரப் பலகையை நிறுவும் ரஷ்ய நிறுவனம்!

 

விண்வெளி

விற்பனை செய்யும் பொருளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அதைப் பற்றி விளம்பரப்படுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். குறிப்பாக விளம்பரப்பலகைகள் பல காலமாகவே அதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் பார்வை படும் இடங்களில் இவை வைக்கப்படும். அதுபோல நாங்கள் வைக்கும் விளம்பரப்பலகையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி , உலகில் உள்ள மக்கள் அனைவருமே பார்க்க முடியும் என்கிறது ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். அதைச் சாத்தியமாக்குவதற்காக இதுவரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத இடத்தில் அந்த விளம்பரப் பலகையை நிறுவ உள்ளது. ஸ்டார் ராக்கெட் (StartRocket) என்ற இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் விண்வெளியைத்தான் அதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஒளி உமிழும் தன்மை கொண்ட சிறிய செயற்கை கோள்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.

ஸ்டார் ராக்கெட் (StartRocket) விளம்பரப்பலகை

பூமியில் இருந்து 400 முதல் 500 கிலோமீட்டர் உயரத்தில் இந்த செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்படும். அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமாக வெவ்வேறு வடிவங்களில் எழுத்துகளையும், வடிவங்களையும் உருவாக்க முடியும். இரவு நேரங்களில் உலகம் முழுவதுமுள்ள 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்க்க முடியும். இதன் மூலமாக வெறும் விளம்பரங்கள் மட்டுமின்றி, மக்களுக்கான தகவல்கள், அவரச கால எச்சரிக்கைகள் ஆகியவற்றையும் காட்ட முடியும். 2021-ம் ஆண்டில் இருந்து இது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அந் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.