97 வயதிலும் கார் ஓட்ட ஆசை! - விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் பிலிப் | 97-year-old Prince Philip, escapes unhurt from car crash in england

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (18/01/2019)

கடைசி தொடர்பு:10:12 (18/01/2019)

97 வயதிலும் கார் ஓட்ட ஆசை! - விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் பிலிப்

ங்கிலாந்து ராணியின் கணவரும் பிரிட்டன் இளவரசருமான பிலிப் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இளவரசர் உயிர் தப்பினார். 

இளவரசர் பிலிப்

கிழக்கு இங்கிலாந்துப் பகுதியில் ஷெரிங்டாம் எஸ்டேட் பகுதியில் மற்றோரு காருடன் மோதிய பிலிப்பின் லேண்ட் ரோவர் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. எனினும் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிலிப் காருடன் மோதிய மற்றொரு காரில் இருந்த பெண் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 1947- ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை பிலிப் திருமணம் செய்தார். 2017- ம் ஆண்டு வரை 65 ஆண்டுகள் அரண்மனை அலுவல் பணியில் இருந்தார். அலுவல் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பிலிப், ராணியுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், ஷெரிங்டாம் எஸ்டேட்டில் உள்ள பங்களாவில்தான் வசித்தார். கடந்த ஆண்டு அவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக கிறிஸ்துமஸ் ஆராதனையில் ராணியுடன் இணைந்து பிரார்த்தனையில் பங்கேற்பார். இந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் உடல்நிலை காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை.

விபத்தில் சிக்கிய கார்

இளவரசர் பிலிப்புக்கு கார் ஓட்டுவதில் கொள்ளைப் பிரியம். இதன் காரணமாக காரை அவரை விரைவாக ஓட்டியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2016- ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, மிட்செல் ஒபாமா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் சென்ற போது இருவருக்கும் பிலிப் கார் ஓட்டியுள்ளார். தன் பணிக் காலத்தில் 22,000 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 5,500 உரை நிகழ்த்தியுள்ளார்.

இந்த விபத்துக்குப் பிறகு அவருக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டனைப் பொறுத்தவரை கார் ஓட்ட வயது ஒரு தடை இல்லை. ஆனால், 70 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். பிரிட்டன் ராணிக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இளவரசர் பிலிப் உரிமத்தைப் புதுப்பித்தே வைத்துள்ளார். பிரிட்டன் ஆட்டோமொபைல் சங்கத் தலைவர் எட்மண்ட் கிங், `குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கார் ஓட்டத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க