காலநிலை மாற்றத்திற்கெதிராக திரண்ட மாணவர்கள்!- பெல்ஜியத்தில் தொடரும் போராட்டம் | More than 10,000 children skip school to join demonstration in Belgian capital

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (19/01/2019)

காலநிலை மாற்றத்திற்கெதிராக திரண்ட மாணவர்கள்!- பெல்ஜியத்தில் தொடரும் போராட்டம்

மாணவர்கள்

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் (Brussels) கடந்த வியாழக்கிழமை பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து காலநிலை மாற்றத்திற்கெதிராக போராட்டத்தை நடத்தியுள்ளனர். உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசு எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவர்களின் கோரிக்கை. பிரஸ்ஸல்ஸ் நகரின் முக்கிய தெருக்களில் பள்ளி மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். மழையும் குளிரும் இருந்தபோதிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வண்ணங்கள், பதாகைகள் என மகிழ்ச்சியாகப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள்.

"காலநிலை மாற்றத்துக்காகப் பள்ளிகள் வேலைநிறுத்தம்" , "நாங்கள் பள்ளிகளைத் தவிர்க்கவில்லை, எங்களது எதிர்காலத்துக்காகப் போராடுகிறோம்", "புவி வெப்பமடைதலுக்கு நடவடிக்கை எடு" என அவர்களது பதாகைகளில் இருந்த வாக்கியங்களும் கவனிக்க வைத்தன. பதாகைகளின் வாக்கியங்கள் ஆங்கிலத்திலும் பிளெமிஷிலும் இருந்தன.   கல்வி இளைஞர்களை முதிர்ச்சியடைந்த குடிமக்களாக மாற்றியுள்ளது. தங்கள் செயல்களின் மூலம் அவர்களே அதனை நிரூபித்துள்ளனர்" என உள்ளூர் பள்ளி இயக்குநரான பேட்ரிக் லான்ஸ்கிஸ்வர்ட்(Patrick Lancksweerdt) தெரிவித்துள்ளார். 

கடந்த வாரத்தில் திரண்ட மாணவர்களைவிட இந்த வாரத்தில் திரண்ட மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம். இதுபோன்ற போராட்டங்களை வாரந்தோறும் நடத்துவதற்கு மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டங்களின் மூலம் காலநிலை மாற்றத்திற்கெதிரான விழிப்புஉணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.