‘சிறிய படகில் தேவதையின் தேசத்திற்கு செல்கிறேன்’- மரணப்படுக்கையில் ஆசிரியை எழுதிய கடிதம்; மாணவர்கள் உருக்கம் | Students cover coffin in drawings for head teacher

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (20/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (20/01/2019)

‘சிறிய படகில் தேவதையின் தேசத்திற்கு செல்கிறேன்’- மரணப்படுக்கையில் ஆசிரியை எழுதிய கடிதம்; மாணவர்கள் உருக்கம்

இங்கிலாந்து நாட்டில் புற்றுநோயால் மரணமடைந்த தலைமை ஆசிரியையின் இறுதிச்சடங்கில் மாணவர்கள் அவரது உடலைச் சுமந்து சென்று தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.  

மாணவர்கள்

Credits: https://twitter.com/SWNS

ஒரு சிறிய படகு தேவதையின் தேசத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது’ மரணப்படுக்கையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு எழுதிய கடிதம் இது. இந்த வாக்கியம் ‘த வயோஜ் ஆஃப் த டான் ட்ரீடர்’நாவலில் சி.எஸ்.லீவிஸ் எழுதியது. என் நினைவில் இருப்பது எல்லாம்  அந்த ஒரு காட்சி தான் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் ஆசிரியை சூ ஈஸ்ட் (58). பெரும்பாலும் ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்குப் பிடிக்காது. அவர்களின் கண்டிப்பே இதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஈஸ்ட் என்றால் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்களிடத்தில் அவர் மேற்கொண்ட அணுகுமுறையே இதற்குக் காரணம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூ ஈஸ்ட் தனது  இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த சமயம் அது. பள்ளி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் அவர் எழுதிய கடிதம் மனதை உருகுவதாக அமைந்திருந்தது. 

சூ ஈஸ்ட்

அந்தக்கடிதத்தில், “என் அன்பு குழந்தைகளே இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் நான் உங்களுடன் இருக்கப்போவதில்லை. நான் சௌகரியமான அறையில் அமைதியாக எனது பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் மிகவும் களைப்புற்று காணப்படுகிறேன். விரைவில் மரணத்தைச் சந்திக்கப்போகிறேன். இந்த கடிதமானது நான் உங்களை விட்டு விடைபெறுகிறேன் என்பதை தெரிவிக்கவே எழுதப்பட்டது. செயிண்ட் ஆண்ட்ரூஸ்  பள்ளி காலங்கள் இனிமையானது. நீங்கள் எல்லாம் அற்புதமான மாணவர்கள். நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட அன்பிற்கு நன்றி. என்னுடைய புதிய பயணம் விரைவில் தொடங்கவுள்ளது. ஒரு சிறிய படகு தேவதையின் தேசத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது” என எழுதியுள்ளார்.

தேவதை தேசம்


புற்றுநோயுடனான அவரது போராட்டம் தோல்வியில் முடிந்தது. இந்தக்கடிதம் எழுதிய சில நாட்களிலே அவர் மரணமடைந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் முன்னாள் மாணவர்கள் உட்படப் 700 பேர் பங்கேற்றனர். சூ ஈஸ்ட் எழுதிய அந்த கடிதத்தில் அந்த சிறிய படகில் ஏதேனும் எழுதவிரும்புகிறீர்களா எனக் கேட்டிருந்தார். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த மாணவர்கள் தாங்கள் தீட்டிய ஓவியங்கள், கடிதங்கள் ஆகியவற்றை அவரது படகில் (சவப்பெட்டி) அலங்கரித்தனர். கிறிஸ்துவ முறைப்படி தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனைக்கு பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.