அமேசான் நிறுவனரின் 1% வருமானம்... அச்சச்சோ ஆய்வு! | 26 richest billionaires own as many assets as the 3.8 billion people who make up for the poorest

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (21/01/2019)

கடைசி தொடர்பு:14:52 (21/01/2019)

அமேசான் நிறுவனரின் 1% வருமானம்... அச்சச்சோ ஆய்வு!

உலக அளவில் உள்ள ஏழை மக்களில், ஐம்பது சதவிகிதத்தினருக்குத் தேவையான சொத்துகள், வெறும் 26 கோடீஸ்வரர்களிடம் உள்ளதாக பிரிடிஷ் தொண்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணம்

இந்தியா உள்பட, உலக நாடுகளில் உள்ள மொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு மற்றும் வருமானம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதேபோன்று மற்றொரு புறம், ஏழைகளின் வாழ்வாதாரம் முன்பைவிட மிகவும் குறைந்துகொண்டேவருகிறது.  சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகில் உள்ள 3.8 பில்லியன் மக்களுக்குத் தேவையான சொத்துகள் வெறும் 26 பணக்காரர்களிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழை

பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறிவருவதாகவும், இது ஆரோக்கியமானது இல்லை எனவும் எச்சரித்துள்ளது.  மேலும், உலகில் உள்ள ஏழைகள், தங்களின் அடுத்த வேளை உணவுக்காக நாள்தோறும் பெரும் சிரமப்பட்டுவருகின்றனர்.  பணக்காரர்களின் வாழ்வாதாரம் மட்டும் தினமும் அதிகரித்து வருவது கொள்கைரீதியில் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏழை

பணக்காரர்களின் ஒரு சதவிகித வரியில், ஆண்டுக்கு 418 பில்லியன் டாலர் கிடைக்கிறது. இதன்மூலம், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க முடியும் (பள்ளியில் இல்லை) அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு வழங்கமுடியும். இதனால் வருடத்துக்கு மூன்று மில்லியன் உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ளவர்களில் 2,200 பில்லியனர்களின் வருமானம் சென்ற ஆண்டில் மட்டும் 900 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பணக்காரரின் வருமானமும் முன்பைவிட 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

ஜெஃப் பெஸோஸ்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸினின் வருமானம், தற்போது 112 பில்லியன் டாலராக  உள்ளது. அதிலிருந்து வெறும் ஒரு சதவிகிதம் மட்டும், கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் உள்ள சுமார் 105 மில்லியன் மக்கள் வாழ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நிதி நெருக்கடி தொடங்கிய 10 ஆண்டுகளில் மட்டும் பணக்காரர்களின் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வோர் இரண்டு நாளுக்கும் ஒரு புதிய பில்லியனர் உருவாவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 “உலகில் உள்ள பணக்காரர்களுக்கும் பிற மக்களுக்கும் இடையே உள்ள வெறுப்புஉணர்வு அதிகரித்தால், அது ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்துவிடும்” என்று ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் கொள்கைப் பரப்பு இயக்குநர் மேத்தீவ் ஸ்பென்ஸர், கார்டியன் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.