`நாங்க திட்டம் போடல; தானாகவே நடந்துட்டு!'- ஒரே வருடத்தில் குழந்தை பெற்ற 31 நர்ஸுகளின் ஆச்சர்ய படம் | Hospital Staffers Give Birth to 32 Babies in 1 Year

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (21/01/2019)

`நாங்க திட்டம் போடல; தானாகவே நடந்துட்டு!'- ஒரே வருடத்தில் குழந்தை பெற்ற 31 நர்ஸுகளின் ஆச்சர்ய படம்

அமெரிக்காவில் மின்னேசொடா (Minnesota) மாகாணத்தில் உள்ளது செயின்ட் கிளவுட் மருத்துவமனை. 2018-ம் ஆண்டு இந்த மருத்துவமனை பல மடங்கு மகிழ்ச்சிகளைச் சந்தித்துள்ளது.

குழந்தைகள்

அங்கு பணியாற்றும் 31 செவிலியர்களுக்குக் கடந்த வருடம் குழந்தை பிறந்தது. ஒரே மருத்துவமனையில் பணிசெய்யும் பெண்களுக்கு ஒரே வருடத்தில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 31 செவிலியர்களில் ஒருவருக்கு மட்டும் இரட்டைச் சந்தோசம். அதாவது, அவருக்கு இரட்டைக் குழந்தை. மொத்தம் 32 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்துள்ளன. 

குழந்தைகள்

இவர்களில் 16 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாகினர். இவர்கள் குழந்தைகளையும் ஒரே மாதத்தில் பெற்றுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் என்னவென்றால் குழந்தை பெற்ற செவிலியர்களில் அதிகமானவர்கள் மகப்பேறு பிரிவில் வேலை செய்பவர்கள். சமீபத்தில் இவர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுடன் புகைப்படமெடுக்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர். முதலில் பிறந்த குழந்தை முதல் கடைசியாக பிறந்த குழந்தை வரை, எண் வாரியாக வரிசைப்படுத்தி அவர்களுக்கு உடை அணிவிக்கப்பட்டிருந்தது. செவிலியர்களும் தங்களின் சீருடைகளில் வந்திருந்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றது. 

குழந்தைகள்

இது பற்றி பேசிய செவிலியர்கள், ``முன்னதாக எங்களின் வயிறு ஒன்றாகப் பெரிதாவதை நோயாளிகள் மிகவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அதிலும் நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்ந்தேதான் அனைத்து இடங்களுக்கும் செல்வோம். அப்போது பலரும் எங்களை வியப்புடன் பார்ப்பார்கள். இப்படி நடக்க வேண்டும் என நாங்கள் எந்தத் திட்டமும் போடவில்லை. தானாகவே நடந்துவிட்டது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் வாழ்வில் இந்த நிகழ்வை எப்போதுமே மறக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.