17 அறுவை சிகிச்சைகள்... 25 முறை மாரடைப்பு... மரணத்துடன் போராடி வென்ற குழந்தை | baby boy survived 25 heart attacks in one day

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (21/01/2019)

கடைசி தொடர்பு:11:59 (24/01/2019)

17 அறுவை சிகிச்சைகள்... 25 முறை மாரடைப்பு... மரணத்துடன் போராடி வென்ற குழந்தை

கீழே புகைப்படத்தில் இருக்கும் தியோ ஃபிரை என்ற இந்தக் குழந்தை 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் உள்ள லிவர் புல்லில் பிறந்தது. தான் பிறந்த அடுத்த 18-வது நாளில் தன் மரணத்துடன் போராடத்தொடங்கிவிட்டான் இந்த வீரன்.

தியோ ஃபிரை

PC : Twitter/@F4uveS

தியோ பிறக்கும்போதே இதயத்தில் இரு துளைகளுடன் பிறந்ததால் இதயம் சரிவர இயங்காமலும் மற்ற உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்ப முடியாத சூழலும் இருந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்து தன் அடுத்த பிறந்தநாளை பார்ப்பதற்குள் இவனுக்கு 17 இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதிலும் ஒரே நாளில் 25 முறை இவனுக்கு மாரடைப்புகளும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தியோ ஃபிரை

ஒரே நாளில் இத்தனை மாரடைப்புகளைப் பெரியவர்கள் கூடத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள எந்த மருத்துவரும் இது போன்ற ஒரு நிகழ்வைச் சந்தித்தது இல்லை எனக் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த சல்ஃபோர்டு ராயல் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தியோவுக்கு இதுவரை 30 மாரடைப்புகள் வந்துள்ளதாகவும் அவன் பிழைக்கவே மாட்டான் என்றுதான் நாங்கள் நினைத்தோம் எனக் கூறியுள்ளனர்.

தியோ ஃபிரை

``குழந்தைக்கு நடந்த 17 அறுவை சிகிச்சைகளில் 2 மேஜர் அறுவை சிகிச்சைகள். அதுவும் 40 மருத்துவர்கள் இணைந்து சிறு குழந்தையின் இதயத்தில் அறுவை சிகிச்சைகள் செய்தனர். தியோ அமைதியாகத் தூங்கிக்கொண்டிருப்பான். ஆனால், திடீரென அவனது உடல் நீல நிறமாக மாறும். பிறகு உடனடியாக மருத்துவரை அழைக்க ஓடுவோம். குழந்தை பிறந்த ஒரு வருடம் நாங்கள் மருத்துவமனையில்தான் இருந்தோம். அந்த ஒரு வருடமும் நான் தூங்கவே இல்லை. என் குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற பதற்றத்துடனேயே இருந்தேன். அவன் இறந்துவிடுவான் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவன் வாழ்வதற்குப் பெரிய ஆர்வம் கொண்டிருந்தான். அவன் மீண்டு வந்தது உண்மையில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வு ” எனத் தெரிவித்துள்ளார் தியோவின் தாய் ஃபாவே சைர்ஸ்.

குழந்தை பிறந்து 19 மாதங்கள் ஆகிறது. தனக்கு இருந்த அனைத்து உடல் பிரச்னைகளுடனும் போராடி வென்று தியோ தற்போது மிகவும் நலமாக உள்ளான்.