``நான்தான் அடுத்த அமெரிக்க அதிபர்” - களத்தில் குதித்தார் கமலா ஹாரீஸ் | Kamala harris announced her american presidential run

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:50 (22/01/2019)

``நான்தான் அடுத்த அமெரிக்க அதிபர்” - களத்தில் குதித்தார் கமலா ஹாரீஸ்

``அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார், இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ். தற்போது கலிபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினராக இருக்கும் அவர், வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இந்தியத் தாய்க்கும் ஜமைக்கா தந்தைக்கும் பிறந்தவர். 

கமலா ஹாரீஸ்

 

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் மீது அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. `ஹெச்1பி விசாவுக்குக் கடும் கட்டுப்பாடுகள், மெக்சிகோ எல்லையில் சுவர் என, மக்கள் மனநிலைக்கு எதிரான காரியங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது அந்தப் போக்கை, ஆரம்பம் முதலே துணிச்சலாக எதிர்த்து வருபவர் கமலா ஹாரீஸ். இதனால், அமெரிக்க இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரிடம் கணிசமான செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். இப்போது, அரசியலில் அடுத்தகட்டத்துக்கு நகர ஆயத்தமாகி யுள்ளார். ``அமெரிக்காவை காப்பதே என் கடமை. அதனால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறேன்” என்று அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். ஆனால், அவருக்குப் போட்டியாக நியூயார்க் செனட் உறுப்பினர் கிர்ஸ்டன், முன்னாள் கேபினட் உறுப்பினர் ஜூலியன் கேஸ்ட்ரோ போன்றவர்கள் ஏற்கெனவே களத்தில் இருக்கிறார்கள். அவர்களை மீறி கமலா ஹாரீஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவாரா என்பது, அவரது பிரசார வியூகங்களில் அடங்கி இருக்கிறது. `மக்களுக்காக கமலா ஹாரீஸ் என்ற முழக்கத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். 

கமலா ஹாரீஸ்

 

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல். குடியரசுக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தாண்டிய அதிபர் வேட்பாளர்கள் யாரும் இதுவரைக்கும் அந்தக் கட்சியில் தென்படவில்லை. அதுவும் இல்லாமல், அமெரிக்க மக்கள் எப்போதுமே முதல்முறை வென்ற அதிபர்களுக்கு இரண்டாவது முறையும் வாய்ப்பு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பில் கிளிண்டன், ஜூனியர் புஷ், ஒபாமா எனத் தொடரும் அந்தப் பாரம்பர்யத்தை, அதிகளவில் நம்பியிருக்கிறார் ட்ரம்ப்.