காலநிலை மாற்றத்தை மறுக்கும் நிகழ்வுக்கு நிதிஉதவி! - சர்ச்சையில் கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் | Google, Facebook And Microsoft Sponsored A Conference That Promoted Climate Change Denial

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (25/01/2019)

காலநிலை மாற்றத்தை மறுக்கும் நிகழ்வுக்கு நிதிஉதவி! - சர்ச்சையில் கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள்

மைக்ரோசாஃப்ட்

தொழிற்புரட்சிக்குப் பின் 1990களில் ஏற்பட்ட உலகமயமாதல், தாராளமயமாதல் உலகின் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே இருந்த புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் என எல்லா விதமான பிரச்னைகளும் இன்னும் அதிகமாகின. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிதான் இவற்றுக்கான முக்கிய காரணங்கள். உலகளவில் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்றவை புவி வெப்பமயமாதலின் ஆபத்துகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் காலநிலை மாற்றத்தை நிராகரிக்கக் கூடிய கருத்தரங்கிற்கு இந்த மூன்று நிறுவனங்களும் நிதி உதவி செய்துள்ளன. 

வாஷிங்டனில் லிபெர்டிகான் (LibertyCon) நிறுவனம் நடத்திய லிபர்டி, லிபர்டேரியன் குழு மாணவர்கள் (libertarian group Students for Liberty) ஆண்டு மாநாட்டிற்கு மூன்று நிறுவனங்களும் ஸ்பான்சர் செய்துள்ளன. கூகுள் நிறுவனம் 25,000 டாலர்கள் நிதி உதவி செய்து முதன்மை ஆதரவாளராக உள்ளது. ஃபேஸ்புக்கும் மைரோசஃப்ட்டும் தலா 10,000 டாலர்கள் நிதி உதவி செய்து இரண்டாம்நிலை ஆதரவாளராக நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதுதவிர நன்கொடைகள் கொடுத்த பல்வேறு ஸ்பான்சர்களும் இருக்கிறார்கள். காலநிலை மாற்ற அறிவியலைத் தாக்கும் விதமாகவும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியைக் குறைத்து மதிப்பிடும் வகையிலும் இந்த கருத்தரங்கம் இருக்கும் என மூன்று நிறுவனங்களுக்கும் முன்னரே தெரியும். 

இவற்றில் இன்னும் சிகரம் என்றால் இந்த கருத்தரங்கில் CO2 கூட்டணி (CO2 Coalition) என்ற குழு கலந்து கொண்டு துண்டறிக்கைகளை அளித்தது. இந்த குழு உயரக்கூடிய பசுமை இல்ல வாயுக்கள் பூமிக்கு நல்லவை என பிரசாரம் மேற்கொள்ளக்கூடியவை. அமெரிக்காவின் வலது சாரி குழுக்களால் இவை நிதி உதவி செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு குழுக்கள் காலநிலை மாற்ற மறுப்புவாதத்தை முன்வைத்து வருகின்றன. அவர்கள் கொடுத்த துண்டறிக்கைகளில் ``நம் வாழ்வையும் நமது பூமியையும் கூடுதலான வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு மூலம்  மேம்படுத்தலாம்’’ , ``அதிகமாகி வரும் கார்பன் டை ஆக்சைடு வருங்கால சந்ததியினருக்கும் குடும்பங்களுக்கும் உதவி செய்யக்கூடியவை’’, சமீபத்தில் அதிகரித்த CO2வானது தாவரங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" இப்படியான வாசகங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வு குறித்து கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைரோசாஃப்ட் நிறுவனங்கள், ``நிகழ்வுகளுக்கு நிதி உதவி அளிப்பதால் அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது’’ என்று விளக்கமளித்திருக்கின்றன.