`அப்பா, அம்மாவைப் பார்க்கப் பிடிக்கல!’ - 159 விமானப் பயணிகளைக் கதிகலங்க வைத்த மாணவன் | French student called in a bomb threat to flight to stop his parents from visiting

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (27/01/2019)

கடைசி தொடர்பு:13:42 (28/01/2019)

`அப்பா, அம்மாவைப் பார்க்கப் பிடிக்கல!’ - 159 விமானப் பயணிகளைக் கதிகலங்க வைத்த மாணவன்

 பிரான்ஸின் லியோனில் இருந்து ரென்னிஸ் நகருக்குக் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈசிஜெட் (easy jet) என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் லியோன் விமான நிலையத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டது. 

விமானம்

விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பால் தரையிறக்கப்பட்டதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 159 பேரும் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். பிறகு, விமானம் முழுவதும் சோதனைக்குள்ளாகப்பட்டது.

விமான போக்குவரத்து

இதற்கிடையில் விமானத்தில் குண்டு இருப்பதாகத் தொலைபேசியில் பேசிய அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபர் 23 வயதாகும் ஒரு கல்லூரி மாணவர். அவரிடம் நடந்த விசாரணையில், “ரென்னிஸில் உள்ள என் அப்பா மற்றும் அம்மா இருவரும் அந்த விமானத்தில்தான் லியோன் வரவிருந்தனர். எனக்கு அவர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவ்வாறு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளைஞருக்கு 75,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது பற்றிப் பேசிய ஈசி ஜெட் செய்தித் தொடர்பாளர், “விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டவுடன் அந்த விஷயம் விமானிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரின் இறுதி முடிவின்படியே பிறகு, விமானம் தரையிறக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.