ஆபாச தளங்களைத் தடுக்க புதிய வழி... 'ஹலால்' இணையதளம் அறிமுகம்!  | 'Halal' web browser for people who want to stay clean online

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/01/2019)

கடைசி தொடர்பு:15:20 (28/01/2019)

 ஆபாச தளங்களைத் தடுக்க புதிய வழி... 'ஹலால்' இணையதளம் அறிமுகம்! 

'சலாம் வெப்' இணையதளத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கக்கூடிய வகையிலான 'டூல்' (tool) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், தேவையற்ற தகவல்கள் வடிகட்டப்பட்டு உங்கள் கவனத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. தேவையற்ற தகவல்கள் வராது. சூதாட்டம் (gambling) அல்லது ஆபாச படங்கள் ( pornography) இடம்பெற்றுள்ள தளங்களை நாடினால், அது குறித்து பயன்பாட்டாளரை 'சலாம் வெப்' எச்சரிக்கும்.

ணையதளம் என்பது இன்றைக்கு கல்வி உள்ளிட்ட பல நல்ல ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்குப் பயன்பட்டாலும், அதைப் பயன்படுத்துபவர்களின் மனதைக் கெடுக்கக்கூடிய வகையிலோ அல்லது விரோத கருத்துகளைப் பரப்பும் வகையிலோ தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களுக்கும் இடமளிக்கும் விதமாக உள்ள நிலையில், பயன்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பான  பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய வகையில், 'சலாம் வெப்' என்ற பெயரில், இஸ்லாமிய  கோட்பாடுகளுடன்கூடிய புதிய இணைய தேடுதல் தளம் ஒன்று அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. 

புதிய இணைய தளம்

மலேசியாவில் செயல்படும் 'சலாம் வெப் டெக்னாஜீஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தேடுதல் தளம் (  browser), இஸ்லாமிய மதம்குறித்த தகவல்கள், மார்க்க சிந்தனைகள், நற்பண்புகள், செய்திகள் மற்றும் இதர அம்சங்களை அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களைக்கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக 'சலாம் வெப்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹஸ்னி ஜரினா மொகமத் கான் தெரிவித்துள்ளார். 

தாங்கள் உருவாக்கியுள்ள இந்தப் புதிய தேடுதல் தளத்தை, உலகம் முழுவதுமுள்ள சுமார் 180 கோடி இஸ்லாமிய மக்களில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேரிடமாவது பயன்படுத்தவைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜரினா, இந்தச் சந்தையில் தங்களின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். 

தவறான தகவல்கள் மற்றும் ஆபாசப் படங்கள் போன்ற, இணையதள பயன்பாட்டாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை (content) நீக்குவது அல்லது அது தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள்கூட, மிகக் குறைந்த அளவுக்கே அக்கறைகாட்டுகின்றன என்று கூறும் ஜரினா, அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள், பல்வேறு இணையதளங்களில் நடக்கும் அவதூறான உரையாடல்களையெல்லாம் பார்த்ததில், 'பெண்களுக்கு எதிரான நச்சுக் கருத்துகள் அதிகம் இடம்பெறும் இடமாக ட்விட்டர் தளம் உள்ளது' என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஹஸ்னி ஜரினா

சூதாட்டங்கள், ஆபாசத் தளங்கள் அல்லது மத ரீதியிலான துவேஷ கருத்துகள் அடங்கிய சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களைத் தடுத்துள்ளதாக (block) தெரிவித்துள்ள 'சலாம் வெப்', வன்முறை கருத்துகள் மற்றும் படங்கள் உள்ளிட்ட இதர 'அடல்ட்' பக்கங்கள் மற்றும் வீடியோக்களையும் தேடுதல் தளத்திலிருந்து நீக்கி உள்ளதாகக் கூறியுள்ளது. அதே சமயம் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வேண்டாத தளங்கள் வந்துவிட்டால், அதுகுறித்து பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கும்பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட பக்கங்கள் நீக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

" இணைய தேடுதல் தளத்தை சிறந்ததாக்க நாங்கள் விரும்புகிறோம். இணையதளத்தில் நல்ல விஷயங்களும் உள்ளன, கெட்ட விஷயங்களும் உள்ளன என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனவேதான், 'சலாம் வெப்' உங்களுக்கு இணையதளத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கக்கூடிய வகையிலான 'டூல்' (tool) ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இதைப் பயன்படுத்துவதன்மூலம், தேவையற்ற தகவல்கள் வடிகட்டப்பட்டு உங்கள் கவனத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. சரியான, நடுநிலையான தகவல்கள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். தேவையற்ற தகவல்கள் வராது. சூதாட்டம் (gambling) அல்லது ஆபாசப் படங்கள் ( pornography) இடம்பெற்றுள்ள தளங்களை  நாடினால், அதுகுறித்து பயன்பாட்டாளரை 'சலாம் வெப்' எச்சரிக்கும். 

இதுமட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கான  குறிப்பிட்ட பண்டிகைகள், மார்க்க சிந்தனைகள் போன்ற தகவல்களும்,  தொழுகை நேரங்கள், எந்தத் திசையை நோக்கித் தொழுக வேண்டும் என்பது போன்றவற்றைத் தெரிவிக்கும் தகவல்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கும். 

இஸ்லாமியர்களுக்கான ஷரியத் சட்ட விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் தளத்துக்கு, தன்னிச்சையான ஷரியத் சட்ட கண்காணிப்பு வாரியத்தின் ஒப்புதல் சான்று பெறப்பட்டுள்ளது. 

ஆபாச தளங்கள் குறித்து எச்சரிக்கை

இணையதளம் என்பது இன்றைய காலகட்டத்தில் தீங்குகள் விளைவிக்கும் ஒரு இடமாக மாறிவிட்ட நிலையில், அதற்கு மாற்றான ஒரு தளம் தேவை. அதைத்தான் நாங்கள் தற்போது கொண்டுவந்துள்ளோம். இஸ்லாமியர்களை நோக்கமாகக்கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டாலும், உலகில் யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என ஜரினா மேலும் தெரிவித்துள்ளார். 

ஹலால் என்பது அரபு மொழிச் சொல். ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயல் போன்றவற்றைக் குறிப்பதாகும். 
  

நீங்க எப்படி பீல் பண்றீங்க