கடுங்குளிரில் வாடிய சிறுவன்; நண்பனாக மாறி அரவணைத்த கரடி! - கரோலினாவில் ஆச்சர்யம் | Bear Secures a 3 Year Old Boy at North Carolina

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (28/01/2019)

கடுங்குளிரில் வாடிய சிறுவன்; நண்பனாக மாறி அரவணைத்த கரடி! - கரோலினாவில் ஆச்சர்யம்

வடக்குக் கரோலினா மாகாணம் எர்னல் பகுதியில் கேசி ஹேத்வே என்ற சிறுவன், தன் பாட்டி வீட்டுக்குப்  பின்புறமுள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். உடன் விளையாடிய மற்ற சிறுவர்கள் வீடு திரும்பிய நிலையில் ஹேத்வே காணவில்லை. அப்போது குளிரின் தாக்கம் மிக மோசமாக இருந்ததால் சிறுவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பரபரப்பானது. 

 

கரடி

20 F க்குக் குறைவாக மோசமான குளிர் வாட்டியது. குளிரைத் தாங்குமளவுக்கு உடை அணியாத ஹேத்வேயை நினைத்து அனைவரும் பதறினர். ஹெலிகாப்டர், ட்ரோன் போன்றவற்றின் உதவியுடன் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தேடுதலைத் தொடங்கினர். கடந்த செவ்வாய் மதியம் தொலைந்த சிறுவன் இரண்டு நாள்களுக்குப் பிறகு மரங்கள் நிறைந்த முட்புதர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டான். தொடர் மழை, நீர்ப் பெருக்குக்கு மத்தியில் சிறுவனை கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர் மீட்புப் படையினர்.

கரடி

 

மீட்கப்பட்ட சிறுவன் ஹேத்வே, `ஒரு கரடி எனக்கு நண்பனாக இருந்தது. அதன் உதவியால் இரண்டு நாள்கள் முழுவதும் அதனுடன் இருந்தேன்' என்று மகிழ்ச்சியாகக் கூறியுள்ளான். இது அங்கிருந்த அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுவனின் உறவினர் பிரியன்னா கூறும்பொழுது, `கடவுள் அவனுக்குத் துணையாக ஒரு நண்பனாகக் கரடியை அனுப்பியுள்ளார். இது ஒரு அதிசயமான நிகழ்வு' என்றார். வடக்கு கரோலினா காடுகளில் கறுப்புக் கரடிகள் பெருமளவில் வசிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.