நாட்டின் பெரும்பாலான அனல்மின் நிலையங்களை மூடும் ஜெர்மனி - என்ன காரணம்? | Germany agrees to shurt down coal power plants by 2038

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:10:34 (29/01/2019)

நாட்டின் பெரும்பாலான அனல்மின் நிலையங்களை மூடும் ஜெர்மனி - என்ன காரணம்?

ஜெர்மனி, தனது நாட்டில் நிலக்கரியைப் பயன்படுத்தும் 84 அனல்மின் நிலையங்களையும் மூடுவதாக முடிவெடுத்துள்ளது. உலகிலேயே நிலக்கரியை அதிகம் பயன்படுத்தும் நாடு ஜெர்மனிதான்.

அனல்மின் நிலையம்

உலகம் முழுக்க மின்சாரம் தயாரிக்கப்படுவதில் புதைபடிவ எரிபொருளான நிலக்கரிதான் பிரதானம். அதனால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் என்பதும் அதிகமானதுதான். வேறு எந்தவொரு ஆற்றலிலும் இவ்வளவு மின்சாரத்தைப் பெற முடியாத காரணத்தால், பெரும்பாலான நாடுகள் இவற்றையே பயன்படுத்திவருகின்றன. ஆனால், நிலக்கரியின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால், பல்வேறு அனல்மின் நிலையங்கள் செயல்பட முடியாமல் இருக்கின்றன. இந்த நிலையில் ஜெர்மனி, தனது நாட்டில் நிலக்கரியைப் பயன்படுத்தும் 84 அனல்மின் நிலையங்களையும் மூடுவதாக முடிவெடுத்துள்ளது. உலகிலேயே நிலக்கரியை அதிகம் பயன்படுத்தும் நாடு ஜெர்மனிதான். மேலும், ஜெர்மனியின் மின்சார உற்பத்தியில் 40 சதவிகித அனல்மின் நிலையங்கள்மூலம் பெறப்படுகின்றன. படிப்படியாக 2038-ம் ஆண்டுக்குள்  இந்த 84 அனல்மின் நிலையங்களும் மூடப்படும் என அறிவித்துள்ளது, அதே நேரத்தில், அனல்மின் நிலையங்களின் மின்சார உற்பத்தியும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய யூனியனில் பெரிய நாடான ஜெர்மனியின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. 1990-களில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்திவந்த ஜெர்மனி, சமீப காலங்களில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதும் இதற்கு ஒரு காரணம். இந்த முடிவுக்காக பகலில் ஆரம்பித்த விவாதம், இரவு முழுக்க நடந்து 21 மணி நேரம் கழித்து காலையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அரசியல், தொழில்துறை, செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட பின்னணிகொண்ட 28 நபர்கள் அடங்கிய அரசாங்கக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. "இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. 2038-க்குப் பிறகு, ஜெர்மனியில் அனல்மின் நிலையங்கள் இருக்காது" என்றார் அரசாங்க குழுவின் தலைவர் ரொனால்டு போஃபுல்லா (Ronald Pofalla).

அனல்மின் நிலையங்களையெல்லாம் மூடிவிட்டு, மின்சாரத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலையே பயன்படுத்தப்போகிறதாம் ஜெர்மனி. அணுமின் ஆற்றலையும் பயன்படுத்தப்போவதில்லை. காரணம், 2011ல் நிகழ்ந்த ஃபுக்குஷிமா விபத்துக்குப் பிறகு, அணுமின் நிலையங்களே வேண்டாம் எனவும், இருக்கக்கூடிய அணுமின் நிலையங்களையும் 2022-க்குள் மூடுவதாகவும் அறிவித்தது ஜெர்மனி. அதன்படி இதுவரை மொத்தம் உள்ள 19 அணுமின் நிலையங்களில் 12 அணுமின் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. 84 அனல்மின் நிலையங்கள் மூடுவதில் 2022-க்குள் 24 அனல்மின் நிலையங்கள் மூடப்பட உள்ளன. இதன்மூலம், ஜெர்மனிக்கு அதிக செலவுகள் ஏற்படலாம். ஆனால், அதையும் சமாளிக்கும் வண்ணம் செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.