`புவி வெப்பமாதலே திரும்பி வந்துவிடு!’ - காலநிலை மாற்றத்தைக் கலாய்த்த ட்ரம்ப் ட்வீட்` | Donald Trump Does Not Understand How Global Warming Works, Or play with it?

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (30/01/2019)

`புவி வெப்பமாதலே திரும்பி வந்துவிடு!’ - காலநிலை மாற்றத்தைக் கலாய்த்த ட்ரம்ப் ட்வீட்`

டெனால்டு ட்ரம்ப்

பசுமை இல்லா வாயுக்களின் வெளியேற்றத்தால் புவி வெப்பமாதல் ஏற்படுவதும் அதன் விளைவாகக் காலநிலை மாற்றம் நிகழ்வதும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையாக உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் புவி வெப்பமாதலையும் காலநிலை மாற்றத்தையும் கையாள முடியாமல் பல்வேறு வழிகளில் திணறிக்கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும்கூட இவற்றில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளின் அரசியலிலும் இவை குறித்த விழிப்பு உணர்வுகளும் வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் இயற்கை மீதான நேசமும் குறைந்தபட்ச பொறுப்பு உணர்வும் உடையவர்களுக்கு மட்டுமே. 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கு அறிவியலெல்லாம் தெரிய தேவையில்லை. தெரிந்தாலும் அவற்றை புறந்தள்ளி எளிதில் கலாய்த்துக்கொள்ளலாம். புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் இவையெல்லாம் பொய் எனச் சொல்லலாம். அறிவியலே இல்லை எனப் பேசலாம். உச்சபட்சமாக இவற்றைக் கலாய்த்து வைத்துச் செய்யலாம். இந்த மாதிரியான ட்வீட் ஒன்றைத்தான் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

``அழகான மத்திய மேற்குப் பகுதியில் குளிர் காற்றின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். இதுவரை வரலாற்றில் பதிவு செய்யப்படாத குளிராக இது இருக்கும். வரும் நாள்களில் குளிர் இன்னும் அதிகமாகலாம். சில நிமிடங்களுக்குக்கூட வெளியே வர இயலாத அளவுக்குக் குளிர் இருக்கும். புவி வெப்பமாதல் இருந்தும் என்ன நடக்கிறது. புவி வெப்பமாதலே தயவுசெய்து சீக்கிரம் திரும்பி வந்துவிடு, எங்களுக்கு நீ தேவை’’ எனப் பொருள்படும்படி ட்வீட் பதிவிட்டுள்ளார். 

ட்ரம்ப் ட்விட்

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியிலும் பெரும்பான்மையான பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இந்தப் பதிவு தேவைதானா. புவி வெப்பமாதல் என்றால் வெப்பம் மட்டும்தான் என நீங்கள் நினைக்கும் அளவுக்குக் குழந்தை இல்லை. அறிவியல் படித்து தொலையுங்கள். மூளையுடன் நடந்துகொள்ளுங்கள் எனப் பதிலுக்கு ட்விட்டரில் ட்ரம்ப்பை வைத்துச் செய்திருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் ட்ரம்ப் அசரவில்லை. காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து இதுபோன்ற வாதங்களை வைத்துதான் வருகிறார். 

தொழிற்புரட்சியால் மிக அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றிய பின் தற்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காகப் பாரிஸ் ஒப்பந்தத்தில் தனி கட்டுப்பாடுகள் விதித்தபோது அதை மீறியதும் அமெரிக்காதான். இப்போது வரை கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுடன் ட்ரம்பின் ட்வீட்டைப் பொருத்திப் பார்த்தால் இயற்கையையும் மக்களையும் பாதுகாக்க தொலைநோக்காக எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்கா முன்னெடுக்காது.