`அவள் எங்களின் தேவதை!’ - அமெரிக்க குளிரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் | Chicago woman rented 20 rooms to bring homeless out of the cold

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (02/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (02/02/2019)

`அவள் எங்களின் தேவதை!’ - அமெரிக்க குளிரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

தற்போது அமெரிக்கா வரலாறு காணாத குளிரில் சிக்கி திண்டாடி வருகிறது. சில இடங்களில் -40 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள சிகாகோவும் இதற்கு விதிவிலக்கல்ல. எப்போதும் துருவங்களில் இருக்கும் `polar vertex’ கீழிறங்கி அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளதுதான் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணமாம். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உறைந்த சிகாகோ

PC :Twitter/@barrybutler9

இப்படி உறையவைக்கும் பனியிலும் பல மக்கள் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வருகின்றனர். வீடுகள் இல்லாதவர்களுக்கு ஹோட்டலில் சில ரூம்களை வாடகைக்கு எடுத்துத் தந்து உதவியுள்ளார் சிகாகோவை சேர்ந்த ஒரு பெண். இவரின் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

பெய்னி (payne) என்ற பெண் தன் நண்பர்களுடன் இணைந்து பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் தெற்கு சிகாகோ பகுதிக்குச் சென்றபோது அங்கு பல மக்கள் சாலை ஓரங்களில் கூடாரங்கள் அமைத்து வாழ்ந்துவருவதைப் பார்த்துள்ளார். உடனடியாகத் தன் பணத்தில் 20 ஹோட்டலில் ரூம்களை வாடகைக்கு எடுத்து அங்கு 80-க்கும் அதிகமானவர்களைத் தங்கவைத்துள்ளார்.

பெய்னி

இது பற்றிப் பேசிய மக்கள், “பெய்னிதான் எங்களின் தேவதை. எங்களுக்கு ஏதேனும் உதவி கிடைக்குமா என நாங்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் சரியாக வந்து பெய்னி எங்களுக்கு உதவினார். உதவியைத் தாண்டி அறையில் எங்களுக்குத் தேவையாக அனைத்துப் பொருள்கள் கிடைக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். இவரைப்போல பல சமூக ஆர்வலர்கள் பல இடங்களில் உதவி செய்து வருகின்றனர். அவர்கள் எங்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறி உதவுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.