உச்சகட்ட குளிரில் அமெரிக்கா! - கம்பிபோல் மாறிய பெண்ணின் தலைமுடி #viralvideo | US Woman's Hair Instantly Freezes into Cool

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (02/02/2019)

கடைசி தொடர்பு:18:55 (02/02/2019)

உச்சகட்ட குளிரில் அமெரிக்கா! - கம்பிபோல் மாறிய பெண்ணின் தலைமுடி #viralvideo

அன்டார்டிகாவைவிட அதிக குளிரில் நடுங்கிவருகிறது அமெரிக்கா. அந்நாட்டு மக்கள், இயல்பாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவிவருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஜீரோ டிகிரி செல்ஷியஸையும் கடந்து, மைனஸுக்கும் கீழே சென்றுகொண்டிருக்கிறது அமெரிக்காவில் வெப்பநிலை. 

 PC : @XHNews

 துருவங்களில் இருக்கும் `polar vertex’ கீழிறங்கி, அமெரிக்காவில் மையம்கொண்டுள்ளதுதான் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பனியினால் அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிகாகோ பகுதிகளில், ரயில் தண்டவாளங்களில் நெருப்பு பற்றவைத்து, அதில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றிய பின்தான் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

PC : @FouziaMaa

அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகர மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குளிரின் நிலைபற்றி அவ்வப்போது புகைப்படங்களாகவோ வீடியோவாகவோ வெளியிட்டுவருகின்றனர். முன்னதாக வைரலான ஒரு வீடியோவில், ஒருவர் சுடும் நீரை வானம் நோக்கி தூக்கி ஊற்றுகிறார். அது, அடுத்த சில நொடிகளில் புகையாக மாறிவிடுகிறது. இந்த வீடியோ, சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

இதன் வரிசையில், தற்போது மற்றொரு வீடியோவும் இடம்பிடித்துவிட்டது. அமெரிக்காவின் லோவா (Lowa) நகரத்தைச் சேர்ந்த டெய்லோர் ஸ்கேலோன் என்ற பெண், தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு தன் வீட்டு வாசலில் சில விநாடிகள் நிற்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அவர் தலை முடியில் இருந்த நீர் உறைந்து முடி கம்பிபோல் நீட்டிக்கொண்டு நிற்கிறது. 

இந்த வீடியோ பதிவிடப்பட்டு இரண்டு தினங்களில், சுமார் 2.7 மில்லியன் பேர் இதைப் பார்த்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.