வெள்ளத்தால் ஸ்தம்பித்த ஆஸ்திரேலியா! - தெருக்களில் திரியும் முதலைகளால் மக்கள் பீதி | Australia floods bring crocodiles to the streets

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (04/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (04/02/2019)

வெள்ளத்தால் ஸ்தம்பித்த ஆஸ்திரேலியா! - தெருக்களில் திரியும் முதலைகளால் மக்கள் பீதி

வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் அங்கு வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளது. இதனால் குயின்ஸ்லேண்ட்  நகரில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.

சுமார் 20,000 மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக டெண்ட்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தங்கள் வீடுகளின் கூரை மீது தங்கியுள்ளனர். இன்னும் சில தினங்களுக்குப் பலத்த காற்றுடன் கனமழை பொழியும் என குயின்ஸ்லேண்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தகுந்த உணவுகள் மற்றும் வசதிகள் இல்லாமல் ஆஸ்திரேலிய மக்கள் திண்டாடி வருகின்றனர்.

டவுன்ஸ்வில்லே நகரில் உள்ள ரோஸ் என்ற ஆறு முழுவதும் நிரம்பியுள்ளதால் அதன் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் விநாடிக்கு 1,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக அந்த நகர் முழுவதும் மின்சாரம் இல்லாமல், மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரோஸ் ஆற்றில் இருந்து ஊருக்குள் அடித்து வரப்படும் நீரில் முதலைகளும், பாம்புகளும் சாலையிலேயே செல்வதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

``தற்போது குயின்ஸ்லேண்ட் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பொழிந்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அந்த மாகாணத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.