35 மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்... பாதிப்பு இருக்குமா? | Moving north pole magnetic field

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (07/02/2019)

கடைசி தொடர்பு:19:35 (07/02/2019)

35 மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்... பாதிப்பு இருக்குமா?

பூமியின் வட துருவ காந்தப் புலம், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து நகர்ந்துவருகிறது. இதனால், இதுவரை துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் திசைகாட்டிகளின் அளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். அடுத்த ஒரு வருடத்துக்கான துருவங்கள் பற்றிய புதிய ஆய்வைக் கடந்த 5-ம் தேதி வெளியிட்டனர். அதில், காந்த வட துருவம் கடந்த ஒரு வருடத்தில் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டிலேயே சர்வதேச நேரக் கோட்டை (international date line) கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடதுருவ காந்தப் புலம்

வட துருவ காந்தப் புலம் நகர்வதால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் நிலையாக இருக்கும் வழிகாட்டிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும். விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருக்கும் காந்த திசைக்காட்டிகள், தானாகவே வடகாந்தப் புலத்தை நோக்கித் திரும்பும். இதுதவிர, செயற்கைக் கோள்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்கும் ஜி.பி.எஸ்-களுக்கும் எந்தப் பாதிப்புகளும் ஏற்படாது. அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்‘ வட துருவ காந்தப்புல நகர்வைத் தொடர்ந்து, காந்த மாதிரியைப் புதுப்பித்துவருகிறது. இந்தப் புதிய மாதிரிகளைத்தான், செயற்கைக் கோள்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றன. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், முடக்க நினைத்திருக்கும் பல அரசுத் துறைகளில், என்.ஓ.ஏ.ஏ-வும் ஒன்று. 

இந்த காந்தப் புல நகர்வால், வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கு சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்துவருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.